திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டுக்கான விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.
கடலில் புனித நீராடியும், கோயில் வளாகத்தில் அங்கப் பிரதட்சணம் செய்தும் பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கினர்.
பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர்.
ஆறு நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது.
அன்று மாலை 4 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக எழுந்தருளுகிறார்.
தொடர்ந்து திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும்.
இதற்கு மறுநாள், நவம்பர் 16-ம் தேதி முருகப்பெருமான் - தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது
கந்த சஷ்டி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் ஆறு நாட்களும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.
சில பக்தர்கள் திருச்செந்தூரிலேயே தங்கி விரதம் மேற்கொள்கின்றனர்.
சூரசம்ஹாரம் நடைபெறும் நாளில் முருகப்பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை, அன்னதானம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 493 சிசிடிவி கேமராக்கள், 26 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணியில் சுமார் 5,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
கந்த சஷ்டி விரதம் தொடங்கியுள்ள நிலையில், திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர்.
கடற்கரையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டுள்ளது.
====================