திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில்
கந்தசஷ்டி விழாவில் முக்கிய சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெறுகிறது. இதன் காரணமாக இப்போதிலிருந்தே திருச்செந்தூர் நோக்கி பக்தர்கள் படையெடுக்கத் தொடங்கி விட்டனர்.
10 -ஆம் தேதி தொடங்கிய கந்தசஷ்டி விழா
முருகன் என்றாலே அறுபடை வீடுதான். அத்தகைய சிறப்பு வாய்ந்த அறுபடைத் தலங்களில் ஒன்றான திருச்செந்தூரில், கடந்த 10-ஆம் தேதி கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
தங்க சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்
நான்காம் நாளான நேற்று ( 13-11-2026) காலையில், யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் மற்று வள்ளி, தெய்வானை அம்பாள்களுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
அதன்பின்னர் வள்ளி தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை (15-11-2026) நடைபெற உள்ளது.
இந்நிகழ்வை முன்னிட்டு,
அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு
1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்
அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்
பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறும்.
இதையடுத்து யாகசாலையில் இருந்து பகல் 12.45 மணியளவில் ஜெயந்திநாதர் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலான பாடல்களுடன், மேளவாத்தியங்களுடன் சஷ்முகவிலாசம் சேர்தலும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறும்.
மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரம்
மேல் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் பிற்பகல் 2 மணிக்கு, ஜெயந்திநாதருக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறும். பின்னர் மாலை 4 மணியளவில் ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரையில் எழுந்தருளி, அங்கு சூரசம்ஹாரம் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
சுவாமி-தெய்வானை திருக்கல்யாண வைபவம்
சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து, நாளை மறுநாள் (17-11-2026) அதிகாலை 5.30 மணிக்கு தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்படுதல், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சுவாமிகள் காட்சி கொடுத்தல், மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு மேல் சுவாமிக்கும் தெய்வானை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் இனிதே நடைபெறும்.
திருச்செந்தூரில் பலத்த பாதுகாப்பு
சூரசம்ஹாரத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் குவிவார்கள் என்பதால், பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு, தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து செய்து வருகின்றனர்.
கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் அருணாச்சலம் மற்றும் கோயில் பணியாளர்கள் போதிய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
========