இந்திர விழா to பொங்கல் திருநாள்
Pongal Festival 2026 History in Tamil : விவசாயத்துடன் தொடர்புடைய பண்டிகை என்றால் அது பொங்கல் தான். இந்த விழா சங்க காலத்தில் 'இந்திரா விழா’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. பொங்கல் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் நிலையில், சோழர்கள் காவிரிபூம்பட்டினத்தில் இந்திர விழாவை 28 நாட்கள் கொண்டாடி இருக்கிறார்கள். இதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.
இந்திரனுக்கு நன்றி நவிலும் விழா
மழை தரும் கடவுளாக இருந்த இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகையை ‘இந்திர விழாவாக’ கொண்டாடினர்(Indira Vizha Festival in Tamil). தமிழர்கள்
அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவன் பூம்புகார் வந்ததாகவும் புராணக் கதை கூறுகிறது. முதல் முறையாக இந்திர விழா நடந்தபோது, அதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க முரசறைந்து பொது அறிவிப்பாக செய்ததாக வரலாறு கூறுகிறது.
வீட்டை அலங்கரித்து விழா
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்து வாசலில் கோலமிட்டு வண்ணப் பூக்களால் வீட்டை அலங்கரித்ததைப் போன்றே இந்திர விழாவிலும் நடைபெற்றதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. கோவில்களிலும் அதேபோல் நடைபெற்று இருக்கிறது.
இந்திரனுக்கு நன்றி தெரிவித்த மக்கள்
மழைக்குரிய கடவுளான இந்திரனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து, , பயிர்கள் செழித்து வளரும் என மக்கள் நம்பினர். அதனால்தான் இந்திரனை பெருமைப்படுத்தும் மற்றும் நன்றி செலுத்தும் விழாவாக பொங்கல் பண்டிகையை இந்திர விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சூரியனை கொண்டாடும் பொங்கல் திருநாள்
பிற்காலத்தில் சூரியனை பற்றிய அருமை, பெருமைகளை உணர்ந்து சூரிய பகவானை கொண்டாடும் விழாவாக பொங்கல் பண்டிகை மாறியது. பருவநிலை மாற்றங்களுக்கு சூரியனை முக்கியமானவர் என்பதை உணர்ந்த தமிழர்கள் தங்கள் வழிபாட்டை மாற்றிக் கொண்டனர். சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விழாவாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
தை பொங்கலாக மாறிய இந்திர விழா
தங்கள் வயல்களில் விளைந்த முதல் புது நெல்லை அறுவடை செய்து அதை சூரிய பகவானுக்கு படையலிட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்வது தொடங்கியது. அந்தவகையில் இந்திர விழாவாக தொடங்கி, சூரிய விழாவாக மாறியதுதான் தைப்பொங்கல் பண்டிகை.
பஞ்ச பூதங்களை வழிபடும் பொங்கல்
பஞ்சபூத வழிபாடாக பொங்கல் கொண்டாடப்படுவதால், கிராமங்களில் இன்றும் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவையே பஞ்சபூதங்கள். மண் பானை பூமியிருந்து பெறப்படும் களி மண்ணில் செய்யப்படுகிறது.
அந்தப் பானையில் நீர் விட்டு, பனை ஓலை மூலம் நெருப்பு மூட்டி அரிசியை வேக வைக்கிறார்கள். அதனை காற்று பொங்கி வர உதவுகிறது. வெட்டவெளியில் ஆகாயத்தைப் பார்த்து பொங்கல் வைத்து பஞ்ச பூதங்களுக்கு மரியாதை செய்து வழிபடுதவே பொங்கல் வழிபாட்டு முறை.
பொங்கல் விழாவில் புது மஞ்சள்
மங்கலப் பொருட்களில் முதன்மையானது மஞ்சள். இதன் காரணமாகவே புதுப்பனையில் பொங்கல் வைக்கும் முன் அதில் மஞ்சள் கொத்து சுற்றி கட்டி பொங்கல் வைக்கிறோம். பொங்கல் விழாவில் முக்கிய இடம் வகிக்கும் மற்றொரு பொருள் கரும்பு.
சுவையில் தனித்துவம் கொண்ட கரும்பு
இதற்கு காரணம் கரும்பு அடி முதல் நுனி வரை ஒரே மாதிரியான சுவையில் இருப்பதில்லை. அடிக்கரும்பு இனிக்கும், நுனிக்கரும்பு உப்புச் சுவையில் இருக்கும். கரும்பின் மேற்பரப்பு எத்தனையோ வளைவுகள் மற்றும் முடிச்சுகளும் கொண்டது. இருந்தாலும் அதன் உள்ளே இனிப்பு சுவை மிகுந்த சாறு உள்ளது. இதைபோலவே வாழ்க்கையில் எத்தனையோ கடுமையான சோதனைகள் வந்தாலும் இறுதியில் சுவையான வாழ்க்கை உள்ளது என்பதை உணர்த்துவதற்காகவே கரும்புக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
பொங்கல் என்றால் மாக்கோலம் தான்
தமிழர் திருநாள் என்றழைக்கப்படும் பொங்கல் நாளன்று வீடு முழுவதும் மாக்கோலமிட்டு, வாசலில் வண்ணக் கோலமிட்டு, மாவிலை, ஆவாரம் பூ, வேப்பிலை, கூரை போன்றவற்றை காப்பு கட்டி வாசலில் இருபுறமும் தித்திக்கும் கருப்பையும் கட்டி வைத்து பெரியவர்களும்,சிறியவர்களும் விடியற்காலையில் எழுந்து நீராடி புத்தாடைகள் அணிவர்.
சூரியன் உதிக்கும் நேரம் வெளியே பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் தங்கள் நன்றியை வெளிப்படுத்தி, இறையருளை பெற்று, மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
================