உலகப்புகழ் பெற்ற திருப்பதி :
TTD Tirumala Tirupati Brahmotsavam 2025 : உலகப் புகழ் பெற்ற ஏழுமலையான், பக்தர்களால் அதிக அளவில் காணிக்கை பெறும் தலமாக திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும், லட்சக் கணக்கான மக்கள் திருப்பதிக்கு வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றி, பெருமாளை சேவித்து செல்கின்றனர். முக்கிய விழாக் காலங்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சுவாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் கூட ஆகும். அந்த அளவுக்கு கூட்டம் திரளும்.
தமிழகத்தின் வட எல்லை திருப்பதி :
திருப்பதி கோவில் முதலில் யாரால் கட்டப்பட்டது என்பதை இதுவரை சரியாக கணிக்க முடியவில்லை. தமிழின் ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலையில் திருப்பதி பற்றி குறிப்பிடப்பட்டு வருகிறது. தமிழத்தின் எல்லை திருவேங்கடம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், திருப்பதி பழமை வாய்ந்த கோவில் நகரம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மணி அடித்து தீபாராதனை - சம்பிரதாயம் :
திருப்பதி கோவிலை பற்றி பல சுவாரஸ்யமான வரலாறுகள் உண்டு. ஒவ்வொன்றும், பெருமாளின் பெருமை, பக்தர்களின் அன்பு, பக்தியை வெளிப்படுத்தும். கோவில் கருவறையில் உள்ள பெருமாள் சிலையும், மிகவும் பழமை வாய்ந்தது. எல்லா கோவில்களிலும் இறைவனுக்கு தீபாராதனை காட்டும் போது மணி அடிப்பது வழக்கம். பூசை செய்பவர்கள் மணியை ஒலித்து, தீபாராதனை காட்டுவர்.
திருப்பதி கருவறையில் மணி கிடையாது :
ஆனால், திருப்பதி ஏழுமலையான் சன்னிதியில் மட்டும், பெருமாளுக்கு தீபாராதனை காட்டும் போது கை மணி ஒலிக்கப்படுவதில்லை. இதன் பின்னால் சுவாரஸ்யமான புராணக் கதை ஒன்று இருக்கிறது.
மகா விஷ்ணு, ஒவ்வொரு முறை அவதாரம் எடுக்கும் போதும் அவரை பிரிய மனம் இல்லாமல் ஆதிசேஷனும், மகாலட்சுமி அவதாரம் எடுத்தார்கள் என புராணங்கள் சொல்கின்றன. அப்படி திருமலை திருப்பதி கோவில் மணியும் வைணவ மகா குருவாக அவதரித்து, இந்த பூமியில் ஆன்மிக தொண்டாற்றியது கை மணியின் புராணக் கதை.
பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற்றம் :
காஞ்சிபுரம் அருகில் துப்புல் என்ற கிராமத்தில் வசித்த அனந்தசூரி - தோத்தாரம்பா தம்பதிக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ஏழுமலையானின் தீவிர பக்தர்களான இவர்கள், தங்களின் குறையை முறையிட திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்று திருமலையை அடைந்தனர்.
காணமல் போன கோயில் மணி :
நீண்ட தூரம் நடந்து வந்த களைப்பில் இருவரும் சத்திரம் ஒன்றில் இரவு தங்கினர். தூங்கிக் கொண்டிருந்த தோத்தராம்பாவிற்கு, ஏழுமலையானின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை விழுங்கி விட்டது போன்று கனவு வந்தது. இதனால் பதறிப் போய் எழுந்த அவர், கனவு பற்றி தனது கணவரிடம் கூறிக் கொண்டிருந்தார். அப்போது பொழுது விடிந்து விட்டது. திருமலையில் திடீரென பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அசரீரி வாக்கு - பக்தர்கள் பரவசம் :
ஏழுமலையானின் சந்நிதியில் இருந்த கை மணியை காணாமல் போய்விட்டதே அதற்கு காரணம். யாரோ திருடி விட்டதாக ஆளுக்கு ஒரு பக்கம் தேடி, திடீரென ஒலித்த அசரீரி, “ கோவில் கை மணியை யாரும் தேட வேண்டாம். புரட்டாசி சிரவண நட்சத்திரத்தில் அந்த மணி ஒரு அற்புதமான குழந்தையாக பிறக்க உள்ளது. வேங்கடநாதன் என்ற பெயரில் துப்புல் அனந்தசூரி - தோத்தாரம்பா தம்பதிக்கு பிறக்க உள்ளது. அந்த குழந்தை மணி மணியாக பேசும்” எனக் கூறியது.
வேதாந்த தேசிகர் அவதாரம் :
அசரீரி வாக்குப்படி பிறந்த குழந்தை தான் வேதாந்த தேசிகர். திருமலை திருப்பதி ஏழுமலையானின் கோவில் சந்நியில் இருந்த கை மணியே குழந்தையாக அவதரித்த காரணத்தால், அதை போற்றும் விதமாக இன்றும் திருமலையில் பூஜை, தீபாராதனை காட்டப்படும் நேரங்களில் கை மணி அடிக்கும் வழக்கம் கிடையாது. கோவிலில் உள்ள பெரிய மணிகள் மட்டும் தீபாராதனையின் போது ஒலிக்கப்படும்.
தமிழில் நூல்களை அருளிய தேசிகர் :
வைணவ சமய குருமார்களில் மிக முக்கியமானவர் வேதாந்த தேசிகர். கி.பி.1268ம் ஆண்டு அவதரித்த அவருக்கு, பெற்றோர் வேங்கடநாதன் என பெயர் சூட்டினர். ஆனால் இவர் சுவாமி தேசிகன், தூப்புல் நிகமாந்த தேசிகன், தூப்புல் பிள்ளை, உபய வேதாந்தாசாரியர், சர்வ தந்திர சுதந்திரர், வேதாந்த தேசிகர் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார். ஜெகத்குரு ராமானுஜரின் தத்துவங்களை உலக முழுவதும் பரப்பிய பெருமை இவரைச் சேரும். வேதாந்த தேசிகர் சுமார் 124 நூல்களை தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அருளினார்.
மேலும் படிக்க : மோர்க்கார பெண்ணிற்கு மோட்சம் தந்த பெருமாள் - இத படிக்காம போகாதீங்க!
திருமலையில் ஒலிக்கும் வேதாந்த தேசிகர் பாடல்கள் :
தமிழில் இவர் எழுதிய மும்மணிக்கோவை, நவமணிமாலை, அர்த்த பஞ்சகம் உள்ளிட்டவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. உபய வேதாந்தம் எனும் கொள்கையை உருவாக்கி, கோவில்களில் சமஸ்கிருதத்தோடு ஆழ்வார்களின் திருமொழியும் இடம்பெறச் செய்த பெருமை செய்தவரும் வேதாந்த தேசிகரையே சேரும். வைணவ திருத்தலங்களில் இவருக்கென தனி சந்நிதியும் உண்டு. திருமலையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் திருமஞ்சனத்திற்கு முன் வேதாந்த தேசிகரின் அடைக்கலப்பத்து இன்றும் பாடப்பட்டு அவரது பெருமை போற்றப்பட்டுகிறது.
=================