சித்ரா பவுர்ணமி 2026:
திருவண்ணாமலையில் உலகப்புகழ் பெற்ற சித்ரா பவுர்ணமி விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
தென்னகத்து கயிலாயம் என்று போற்றப்படும் அண்ணாமலையார் திருக்கோயிலில், இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அண்ணாமலையாரை வழிபட்டனர்.
பக்தர்களின் அலைமோதிய கூட்டம்
கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு நிகராகக் கருதப்படும் சித்ரா பவுர்ணமி தினத்தில் கிரிவலம் செல்வது, ஒரு வருடம் முழுவதும் கிரிவலம் சென்ற புண்ணியத்தைத் தரும் என்பது ஆன்மிக பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை
இதன் காரணமாக, நேற்று (ஏப்.30) அதிகாலை முதலே தமிழகம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவியத் தொடங்கினர்.
நேற்று இரவு 9.52 மணிக்குத் தொடங்கிய கிரிவல நேரத்தைத் தொடர்ந்து, விடிய விடிய லட்சக்கணக்கானோர் 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையில் வலம் வந்தனர்.
6 மணி நேரக் காத்திருப்பு மற்றும் சிறப்பு ஏற்பாடுகள்
அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனைத் தரிசிக்கப் பக்தர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தபோதிலும், பக்தர்களின் பக்தி குறையவில்லை.
கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள்
பக்தர்களின் வசதிக்காகக் கோயில் நிர்வாகம் சார்பில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்குத் தற்காலிக நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், நீண்ட வரிசையில் நின்றிருந்த மக்களுக்குக் கோயில் சார்பில் குடிநீர், மோர், பிஸ்கட் மற்றும் தர்பூசணி துண்டுகள் தடையின்றி வழங்கப்பட்டன.
சிறப்பு அபிஷேகம், அலங்காரம்
நேற்று அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் தொடங்கின. அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்குச் சிறப்பு அலங்காரங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ச்சியான தரிசனம்
பக்தர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, காலை முதல் இரவு 10 மணி வரை நடை அடைக்கப்படாமல் தொடர்ச்சியாகத் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்று இரவு 11.08 மணி வரை பவுர்ணமி திதி இருப்பதால், இன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்வது தொடர்கிறது.
=====