Tiruvannamalai Karthigai Deepam 2025 Lighting At Hills Arunachaleswarar Devotees Chats Arokara Latest News in Tamil Google
ஆன்மிகம்

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்-அரோகரா கோஷத்தில் பக்தர்கள்!

Tiruvannamalai Karthigai Deepam 2025 : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர திருவிழாவான மகாதீபம் மலையில் ஏற்றப்பட்டது, அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்.

Baala Murugan

திருவண்ணாமலை மகாதீபம்

Tiruvannamalai Karthigai Deepam 2025 : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ம் நாளான நேற்று காலை 11 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், அம்பாளுடன் சந்திரசேகரர் புருஷா மிருக வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தீபகொப்பரை பூஜை

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபத்திருவிழா நடைபெற இருந்த நிலையில். மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரை நேற்று காலை சுமார் 5.30 மணியளவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள சின்ன நந்தி சிலை அருகில் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 4,500 லிட்டர் நெய், காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

ஏற்றப்பட்டது மகாதீபம்

அதன்படி, 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் பக்தர்கள் புடைசூழ அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்டது. அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இதனால் திருவண்ணாமலை முழுவதும் பட்டாசு சத்தத்துடன், மகாதீபம் வெளிச்சத்துடன் சிவஅருள் படர்ந்தது. மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செய்தனர்.

காலை முதலே ஏற்றபட்ட பரணிதீபம்

இன்று மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்பட்டது.

மகா தீபத்தை காண 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதால் பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் சுமார் 15 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் வந்து குவிந்து உள்ளனர். விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோவிலில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று முதல் திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் திருவண்ணாமலை நகர் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.