Tiruvannamalai Karthigai Deepam 2026 Free Darshan Ticket Booking
கட்டணமின்றி 3,000 இலவச நுழைவுச் சீட்டுகள் அறிவிப்பு
பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோவிலில், நிகழாண்டு (2026) திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 12-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இவ்விழாவின் சிகர நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் நுழைவுச் சீட்டு
கடந்த ஆண்டுகளில் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்கு ரூ. 500 மற்றும் ரூ. 600 கட்டணத்தில் 1,600 நுழைவுச் சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு பக்தர்களின் நலன் கருதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் அறிவுறுத்தலின்படி, 3,000 நுழைவுச் சீட்டுகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் எனக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
டிக்கெட் ஒதுக்கீடு விவரம்
நவம்பர் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள தீப தரிசனத்திற்கு மொத்தமுள்ள 3,000 இலவச நுழைவுச் சீட்டுகள் கீழ்க்கண்டவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாரு....
பரணி தீபம் (நவ. 24 காலை - மொத்தம் 1,000 சீட்டுகள்)
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பக்தர்களுக்கு 500 நுழைவுச் சீட்டுகளும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கு 500 நுழைவுச் சீட்டுகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
மகா தீபம் (நவ. 24 மாலை - மொத்தம் 2,000 சீட்டுகள்)
அதேபோல் மகா தீபத்தன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பக்தர்களுக்கு 1,000 நுழைவுச் சீட்டுகளும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கு 1,000 நுழைவுச் சீட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்பதிவு செய்யும் முறை மற்றும் குலுக்கல் தேர்வு
தரிசன டிக்கெட் பெற விரும்பும் பக்தர்கள் http://annamalaiyar.hrce.tn.gov.in என்ற திருக்கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்று (நவம்பர் 18, 2026) காலை 11.00 மணிக்குத் தொடங்கியுள்ள முன்பதிவு, வரும் நவம்பர் 20-ஆம் தேதி மாலை 3.00 மணி வரை நடைபெறும்.
குலுக்கல் தேர்வு மற்றும் e-Ticket
நவம்பர் 20-ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் கணினி மூலம் தானியங்கி குலுக்கல் முறையில் 3,000 பயனாளிகள் வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் பக்தர்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னணு நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு அனுப்பி வைக்கப்படும்.
பக்தர்களுக்கான முக்கிய நிபந்தனைகள்
1. ஆதார் அட்டை கட்டாயம்
முன்பதிவு செய்வதற்கும், நவம்பர் 24-ஆம் தேதி கோயில் நுழைவுவாயிலில் மின்னணு நுழைவுச் சீட்டை ஸ்கேன் செய்து தரிசனத்திற்கு அனுமதி பெறுவதற்கும் ஆதார் அட்டையை அடையாளச் சான்றாகக் காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2. ஒரு நிகழ்விற்கு மட்டுமே அனுமதி
முக்கியக் குறிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், பரணி தீபத்திற்கு பதிவு செய்பவரால் மகா தீபத்திற்கும், மகா தீபத்திற்குப் பதிவு செய்பவரால் பரணி தீபத்திற்கும் பதிவு செய்ய இயலாது.
3. நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை
பரணி தீபத்திற்கு ஒரு நபர் ஒரு சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும். மகா தீபத்திற்குப் பதிவு செய்பவர்கள் வெவ்வேறு ஆதார் எண்களைக் கொண்டு அதிகபட்சம் இரண்டு பதிவுகள் வரை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
==============