இன்று மகா சிவராத்திரி 2026 : இதுவரை சிவ பெருமானின் அருளையும், மகா சிவராத்திரி வழிபாடு, விரதம் இருக்க வேண்டிய முறை, நான்கு கால பூஜையில் எந்தெந்த தெய்வங்களை வணங்க வேண்டும் என்பது போன்ற ஆன்மிக தகவல்களை நமது தமிழலை வலைதளத்தில் தெரிந்துகொண்டீர்கள்.
அடுத்ததாக உலகின் முதல் சிவன் கோவில் எங்கு உள்ளது என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?. அப்படி தெரியவில்லை என்றால் இப்போது தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்...!
உலகின் முதல் சிவன் கோவில்
உலகின் முதல் தோன்றிய சிவன் கோவில், 3000 ஆண்டுகள் பழமையான கோவில் என்ற சிறப்பைப் பெற்ற கோவில் தமிழ்நாட்டில் தான் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம் , ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிவாலய தலம் தான் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோவில்.
திருவாசகம்- மாணிக்கவாசகர்
”தென்னாடுடைய சிவனே போற்றி...எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என திருவாசகத்தில் மாணிக்கவாசகர் எழுதியுள்ளார்.
சிவன் தென்னாட்டின் சொந்தக்காரர்
சிவன் தென்னாட்டிற்கு சொந்தக்காரன். அவனது பூர்வீகம் தென் நாடு என்றும் தென்நாட்டிற்குப் பிறகு தான் அனைத்து நாட்டினருக்கும் அவன் உரியவன் என்னும் நோக்கில் எழுதியுள்ளதாகவும் ஆன்மிகவாதிகள் எடுத்துரைக்கின்றனர்.
மேலும் திருவாசகத்தில் 38 இடங்களில் குறிப்பிடும் அளவிற்கு புகழ்பெற்ற திருவாசக திருத்தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது.
உத்தரகோசமங்கை பெயர்க்காரணம்
சிவபெருமான் உமையவளுக்கு வேதம் சொன்ன ஸ்தலம் தான் இந்த உத்தரகோச மங்கை ஆலயம். அதாவது உத்தரம் என்றால் ரகசியம் என்று பொருள். கோசம் என்றால் சொல். மங்கை என்றால் அன்னை பார்வதி தேவி. அதனால் தான் உத்திரகோசமங்கை என்ற பெயர் பெற்றது இத்தலம்.
ஆறடி மரகத நடராசர் சிலை
இங்கு சிவன் ஆறடி உயர மரகத நடராசர் உருவில் காட்சியளிக்கிறார். இந்த சிலையானது உலகிலேயே தனித்துவமானது.
ஆண்டு முழுவதும் மரகத நடராசர் சந்தன காப்பிலேயே காட்சி தருகிறார்.
ஆருத்ரா தரிசனத்தின் போது சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் கிடைக்கப்படுகிறது.
இலந்தையும், தாழம்பூவும்
இந்த கோவிலின் தலமரம் இலந்தை. இது 3000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. பிரம்மனுக்காக பொய் சொல்லி சிவனின் சாபத்தைப் பெற்று பூஜைகளில் மறுக்கப்படும் தாழம்பூ, இங்கு சிவனுக்கு அர்ச்சிக்கப்படுகிறது.
முருகனின் வாகனமாக ஐராவதம்
முருகருக்கு வாகனம் மயில் தானே. ஆனால் இங்கு இந்திரனின் ஐராவதம் அதாவது வெள்ளை யானை முருகனின் வாகனமாக அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு என்றே சொல்லலாம்.
மகா சிவராத்திரி வழிபாடு 2026
இத்தனை சிறப்புகள் வாய்ந்த இத்திருத்தலத்தில் , மகாசிவராத்திரி வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறும். இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு நான்கு கால பூகைகளும் சிறப்பாக நடைபெறும்.
ஆண்டுக்கு ஒருமுறை
மேலும் இங்குள்ள லிங்கோத்பவருக்கு ஆண்டுக்கு ஒருமுறை தான் சிவராத்திரியில் செய்யும் அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கும். அதுவும் மூன்றாவது கால பூஜையாகவே நடத்தப்படும்.
அதிகாலை பொழுதில் 3 மணிக்கு நான்காம் கால பூஜையானது நடத்தபட்டு, பின்னர் வழக்கம் போல கோவில் இயங்கும்.
இன்று மகாசிவராத்திரி... உலகின் முதல் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்.
முடியாதவர்கள் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து சிவ பெருமானின் ஆசியைப் பெற்று மனநிறைவாய் வாழுங்கள்.
கோவில் அமைவிடம்
உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோயில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 10-18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மதுரை-ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் சத்திரக்குடி தாண்டி இந்த தலம் உள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து தெற்கே சுமார் 10 முதல் 15 கி.மீ தொலைவிலும், மதுரையிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.