Mayana Kollai 2026:
Masi Amavasai 2026 Date and Time in Tamil : மயான கொள்ளை வழிபாடு என்பது மாசி மாத அமாவாசையில் அம்மனுக்காக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் ஓர் உற்சவம் என்றே சொல்ல வேண்டும்.
பொதுவாக ஆடி மாதம் தான் அம்மனுக்கு சிறப்பானது. அந்த மாதம் முழுவதும் அம்மனுக்கான சிறப்பு வழிபாடுகள் அரங்கேறும். அதேபோன்ற சிறப்பைப் பெற்றதுதான் இந்த மாசி அமாவாசை.
மகாசிவராத்திரி தினத்திற்கு அடுத்த நாள் வரும் மாசி அமாவாசை தினம்(Masi Amavasai 2026 Date) தான் மயான கொள்ளையாக கொண்டாடப்படுகிறது.
மயான கொள்ளை வரலாறு ?
படைத்தல் தெய்வமான பிரம்மனின் 4 ஆவது தலையை நாம் பார்த்ததே கிடையாது. என்னது பிரம்மனுக்கு நான்கு தலையா என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் நாம் மூன்று தலையைத் தான் பார்க்கிறோம். நான்காவது தலை பிரம்மனின் பின்பக்கம் அமைந்துள்ளது.
பிரம்மனின் ஐந்தாம் தலை
ஆனால் இதற்கு முன்பு, ஒருகாலத்தில் பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்ததால் பெரும் கர்வம் கொண்டிருந்தானாம். சிவன் பிரம்மனின் கர்வத்தை அடக்குவதற்காக ஐந்தாவது தலையை கிள்ளியெறிந்து விட்டாராம்.
பிரம்மஹத்தி தோஷம்
இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுவிட்டது. அதுமட்டுமின்றி கொய்யப்பட்ட பிரம்மனின் ஐந்தாம் தலை சிவன் கையிலேயே ஒட்டிக்கொண்டது.
இதனால் எந்த உணவுப்பொருள் படைக்கப்பட்டாலும் அதை, அந்த ஐந்தாம் தலையான கபாலம் முழுமையாக எடுத்துக்கொள்ளும். இதனால் சிவன் பசியால் துடித்துப்போனார்.
சாபம் பெற்ற பார்வதி தேவி
இதே நேரத்தில் பிரம்மனின் மனைவி சரஸ்வதி தேவி, பார்வதி தேவிக்கு சாபமிட, அவரும் பூலோகத்தில் அலைந்து திரிந்து கடைசியாக ஒரு பாம்பு புற்றில் வாழ்ந்து வந்தார். அந்த இடம் தான் மலையனூர்.
பசியால் துடித்த சிவன்
பார்வதி தேவி இருக்கும் இடமறிந்து பசியால் சோர்ந்து போன சிவ பெருமான் அங்கு வர, சிவனின் பசியாற்ற நினைத்தார் பார்வதி.
அதனால் தான் சமைத்த உணவை சிவனுக்கு கொடுக்க முதல் இரண்டு முறையும் சிவன் கையில் ஒட்டியுள்ள பிரம்மனின் ஐந்தாவது கபாலமே முழுவதையும் சாப்பிட்டுவிட்டது.
மூன்றாவது முறையாக பார்வதி தேவி உணவை தூக்கியெறிய, கபாலம் சிதறிய உணவுப் பொருட்களை உண்பதற்காக, சிவனின் கையை விட்டு விலகியது,.
உக்கிர தெய்வமாக மாறிய பார்வதி
அந்த நொடி பார்வதி தேவி ஆக்ரோஷமான அம்மனாக அங்காள பரமேஷ்வரியாக மாறி அந்த கபாலத்தை காலால் மிதித்து பூமிக்குள் அழுத்தினார்.
அதன்பிறகு தான் சிவனைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. இன்றளவும் இந்த நாளை நாம் மயான கொள்ளையாக சிறப்பித்து வருகிறோம்.
மயான கொள்ளை சிறப்பு
மயான கொள்ளை தினத்தன்று மயானத்தில் அம்மனுக்கு என்று விசேஷமாக பூஜை நடத்தப்படும்.
மயானத்தில் சிவன் , அங்கால பரமேஷ்வரிக்கு என்று படையல் போட்டு, சாமி வேடமிட்டு, மண்டை ஓடு மாலை, சூரசம்ஹார வேடம் , அம்மனின் வேடம், காட்டேறி வேடம் என பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து நடனமாடி வழிபடுவர்.
வழிபாட்டின் இறுதியில் அம்மன் உணவுப்பொருட்களை தூக்கி வீசும் நிகழ்வு மிகவும் முக்கியமானது.
குழந்தை வரம் வேண்டுபர்கள், நோய்வாய்பட்டவர்கள், சூழ்ச்சிக்கு ஆளாகி வாழ்வில் துன்பங்களை தொடர்ந்து அனுபவிக்கும் நபர்கள் என ஒவ்வொருவரும் அந்த உணவுப்பொருட்களை நம்பிக்கையோடு எடுத்துச் செல்வர்.
இதன் மூலம் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும், பாவங்கள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
செல்வம் செழிக்கும்
மேலும், இந்நிகழ்வின் போது தூக்கியெறியப்படும் பயிர்களை கொண்டு சென்று வீட்டில் வைத்தால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
அங்காள பரமேஷ்வரி நம்பியவர்களை காப்பாற்றுவாள், தங்களுக்கு துன்பம் தருபவர்களை எதிர்கொள்ளும் வல்லமையைத் தருவாள் என்பது நம்பிக்கை.
மயான கொள்ளையின் போது அம்மனுடைய மிகவும் சக்திவாய்ந்த வடிவத்தைக் காணலாம். காய்கறி, பழங்கள், உணவு தானியங்கள் கொண்டு அம்மனை அலங்காரம் செய்து வழிபடுவர்.
சுடுகாட்டில் வழிபாடு
மயான கொள்ளையன்று பெண்கள், ஆண்கள், திருநங்கைகள் என பலரும் காளி வேடமணிந்து சுடுகாட்டில் இரவு நேரத்தில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்.
மயானகொள்ளை பிரபலமான இடங்கள்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மயான கொள்ளை நடந்தாலும் சேலம் காக்காயன், சந்தைபேட்டை, செவ்வாய்ப்பேட்டை, ஜான்சன் பேட்டை முதலான சுடுகாடுகளில் நடக்கும் மயான கொள்ளை மிகவும் பிரபலமானது. இங்கு 100 ஆண்டுகாலமாக மயான கொள்ளை நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னையில் மயான கொள்ளை
சென்னையில் மைலாப்பூர் முண்டகக்கன்னியம்மன் கோவில், கொளத்தூர், ட்ரிப்ளிகேன் போன்ற இடங்களில் மயான கொள்ளை கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதுதவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் மயான கொள்ளை நிகழ்வு சிறப்பாக நடக்கும்.
மயான கொள்ளை பலன்
அன்னை பராசக்தி அனைத்து உயிர்களுக்கும் உணவளிக்கும் நிகழ்வாக பார்க்கப்படுவதால் மயான கொள்ளையில் கலந்து கொண்டால் தோஷங்கள், தீயவை விலகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
முக்திக்காக காத்திருக்கும் ஆன்மாக்களுக்கான நாளாகவும் இந்நாள் கருதப்படுகிறது.