TTD considering selling gold and silver dollars engraved with the image of Tirupati Perumal online google
ஆன்மிகம்

வீடு தேடி வரும் 'ஸ்ரீவாரி' பிரசாதம்! : ஆன்லைனில் தங்கம், வெள்ளி பெருமாள் டாலர்கள் : விற்பனையில் களமிறங்கும் TTD

திருப்பதி பெருமாள் உருவம் பொறித்த தங்கம், வெள்ளி டாலர்களை ஆன்லைனில் விற்பனை செய்வது பற்றி தேவஸ்தானம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

Kannan

ஸ்ரீவாரி பிரசாதம் - ஏழுமலையான் டாலர்கள்

TTD Plans Online Sale Of Srivari Gold And Silver Dollars For Devotees Across India : உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

பக்தர்கள் விருப்பப்பட்டால் வாங்கிக் கொள்ள 'ஸ்ரீவாரி' பிரசாதம் என்ற பெயரில் ஏழுமலையான் உருவம் பதித்த தங்கம் மற்றும் வெள்ளி டாலர்கள் திருமலையில் உள்ள கவுண்ட்டர்களில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆன்லைனில் டாலர்கள் விற்பனை

மொட்டை அடித்து, நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் முடித்த கையோடு இந்த டாலர்களை வாங்குவதை பக்தர்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.

இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக இந்த டாலர்களை ஆன்லைன் தளத்தில் விற்பனைக்குக் கொண்டு வர தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

பக்தர்களுக்கு விரிவான சேவை

தேவஸ்தானத்தின் வருவாயைப் பெருக்குவது குறித்தும், நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்தும் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிதிக் குழு (Finance Committee) சில முக்கியப் பரிந்துரைகளை வழங்கியது.

அதில், 'ஸ்ரீவாரி டாலர்களின்' விற்பனையை விரிவுபடுத்துவதன் மூலம் பக்தர்களுக்குப் பெரிய அளவில் சேவை செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் டாலர்கள், தபால் துறை மூலமாக 'டிரான்ஸிட் இன்சூரன்ஸ்' (Transit Insurance) வசதியுடன் பக்தர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

டாலர்களின் வடிவமைப்பை மேலும் மெருகேற்றவும், புனிதத்தன்மை மாறாமல் நவீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டு, அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறார்கள்.

தங்க முலாம் பூசப்பட்ட டாலர்கள்

தங்கத்தின் விலை உச்சத்தில் இருப்பதால், சாமான்ய மக்களால் பெருமாள் டாலரை வாங்க முடியாது.

எனவே, அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், சாமானியர்களுக்காக 'வெள்ளியில் தங்க முலாம்' பூசப்பட்ட டாலர்களை அறிமுகப்படுத்தவும் தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் ஆன்மிக மதிப்புக் குறையாமல், குறைந்த விலையில் பக்தர்களுக்கு பெருமாள் டாலர்கள் கிடைக்கும்.

பக்தர்களுக்கு வரப்பிரசாதம்

திருப்பதிக்கு நேரில் வர முடியாத முதியவர்கள் மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும். அதே சமயம் தேவஸ்தானத்தின் வருவாயும் கணிசமாக உயரும்.

TTD அறங்காவலர் குழு கூட்டத்தில் இதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைத்தவுடன், ஆன்லைன் விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகும்.

இணைய தளத்தில் ஆர்டர் செய்யலாம்

தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ttdevasthanams.ap.gov.in அல்லது அதன் பிரத்யேக மொபைல் செயலி மூலம் பக்தர்கள் ஆர்டர் செய்யலாம்.

உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முகவரியைப் பதிவு செய்து, தங்கம் அல்லது வெள்ளி டாலரைத் தேர்வு செய்தபின், ஆன்லைன் மூலம் பணத்தைச் செலுத்த வேண்டும்.

இல்லம் தேதி வரும் ஏழுமலையான்

ஆர்டர் செய்த புனிதமான ஸ்ரீவாரி டாலர்கள், இன்சூரன்ஸ் வசதியுடன் கூடிய தபால் சேவை மூலம் பாதுகாப்பான பேக்கிங்கில் நேரடியாக இல்லத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், திருப்பதி லட்டுக்கு அடுத்தபடியாக ஸ்ரீவாரி டாலர்கள் அதிக அளவில் பக்தர்களுக்கு பிரசாதமாக சென்றடையும்.

=====