வைகாசி விசாகம் என்றால் என்ன?
முருகப் பெருமானின் அவதார தினமாகப் போற்றப்படும் வைகாசி விசாகம், ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருநாளாகும்.
வைகாசி விசாகம் புராண வரலாறு
வைகாசி மாத பௌர்ணமியும் விசாக நட்சத்திரமும் இணையும் நன்னாளில், சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்த ஆறு சுடர்களிலிருந்து முருகப்பெருமான் அவதரித்தார் என்பது புராண வரலாறு.
2026 வைகாசி விசாகம் தேதி
இந்த ஆண்டு மே 30-ம் தேதி வைகாசி விசாகம் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நன்னாளில் முருகனின் அருளைப் பெற பெரும்பாலான பக்தர்கள் 48 நாட்கள், 21 நாட்கள், 11 நாட்கள் அல்லது 6 நாட்கள் எனத் தங்களால் இயன்ற அளவில் மாலை அணிந்தோ அல்லது அணியாமலோ கடுமையான விரத முறைகளைப் பின்பற்றுவது வழக்கம்.
மேலும் பால்குடம், காவடி எடுத்தல் மற்றும் பாதயாத்திரை மூலமும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.
பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை
இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
வைகாசி விரதம் இருக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்
இருப்பினும், தற்போதைய பணிச்சூழல் அல்லது உடல்நலக் குறைவு காரணமாகப் பலரால் முறையாக விரதம் இருக்க முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் மனவருத்தம் அடையத் தேவையில்லை.
விரதம் இருக்க முடியாதவர்களும் வைகாசி விசாகத்தின் முழுப் பலன்களையும் பெற சில எளிய ஆன்மீக வழிகள் இதோ உங்களுக்காக
ஆறு விளக்குகள் வழிபாடு
வைகாசி விசாகத்தன்று அதிகாலை 6 மணிக்கு முன்பாக எழுந்து நீராடிவிட்டு, அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
அங்குக் குறைந்தது ஆறு நெய் விளக்குகள் ஏற்றி, மனமுருகி வேண்டிக் கொண்டால் நீங்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
மனதுருகி உச்சரிக்க வேண்டிய மந்திரம்
வீட்டில் உள்ள முருகப்பெருமான் திருவுருவப் படத்திற்கு முன்னால் காலை மற்றும் மாலை என இருவேளையும் விளக்கேற்றி, "சரவணபவ" என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபிக்கலாம் அல்லது ஒரு நோட்டில் எழுதி வழிபடலாம்.
பூஜைப் பொருட்கள் வழங்குதல்
உங்களால் வைகாசி விரதம் இருக்க இயலவில்லை எனில், முருகன் கோவிலில் நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் காணிக்கையாக கொடுக்கலாம்.
அல்லது உங்களது கரங்களால் மலர் மாலைகளைத் தொடுத்து இறைவனுக்கு கைங்கரியம் செய்யலாம்.
அன்னதானம் மற்றும் உதவி
மேலும் வைகாசி விசாகத்தன்று பசியால் வாடும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற அளவிற்கு அன்னதானம் வழங்கலாம்.
மேலும், தூரத்துத் தலங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் முருக பக்தர்களுக்குக் குடிநீர், மோர் முதலான பானங்கள் வழங்குவதும், அவர்கள் தங்கி ஓய்வெடுக்க இடம் அமைத்துக் கொடுப்பதும் கோடி புண்ணியத்தைத் தேடித்தரும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
ஆன்மிகப் பெரியோர்களின் நம்பிக்கை
இந்த எளிய நற்செயல்களைத் தூய்மையான உள்ளன்போடும், பக்தியுடன் செய்வதன் மூலம், கடுமையான விரதம் இருந்ததற்கான பலனைப் பெற்று, வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி, தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளில் பெரும் வெற்றியை அடையலாம் என்பது ஆன்மீகப் பெரியோர்களின் நம்பிக்கையாகும்.
======