தமிழ் மாதங்களில் அமாவாசை
special features of Thai Amavasya தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகிறது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரைக் கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர். இதை அமாவாசை விரதம் என்பர்.
ஆடி, தை அமாவாசை
குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை. மற்ற மாதங்களில் அமாவாசையை கடைபிடிக்க இயலாதவர்கள் தை அமாவாசை அன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து சிறப்பு பூசை (திதி) செய்வார்கள்.
கடல், ஆறுகளில் புனித நீராடல்
இராமேசுவரம்,திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி, மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும்.
ராமேசுவரத்தில் தை அமாவாசை
ராமேசுவரத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் உற்சவர் சிலைகள் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும்.
கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு இராமேசுவரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர்.
இராமேசுவரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நெல்லையப்பர் கோவிலில் லட்ச தீபம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
அன்றைய தினம் அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயில் ஒளிச்சுடர்களால் பிரகாசிக்கும். பல்லாயிர கணக்கானோர்
மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.
ஞாயிறன்று தை அமாவாசை
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தை அமாவாசை நாளை ( 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ) வருகிறது. நாளை அதிகாலை 1,20 மணி முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 2.31 மணிவரை அமாவாசை இருக்கும்.
தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்
எனவே, நாளை அதிகாலை முதல் நண்பகல் 12 மணி வரை, புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து, தான தர்மங்கள் செய்யலாம்.
முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கு அவர்களின் திதி நாட்கள், மகாளய அமாவாசை, தை அமாவாசை மிகவும் உகந்ததாகும்.
உணவு, புத்தாடை படைக்க வேண்டும்
தை அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு உணவு, புத்தாடைகளை படைத்து வழிபட வேண்டும். உணவையும், ஆடையையும் ஏழைகளுக்கு கொடுப்பதன் மூலம் முன்னோர்கள் திருப்தி அடைந்து மகிழ்வர்.
வீட்டில் மங்களம் பெருகும்
இதன் காரணமாக வீட்டில் தடைபட்டு நிற்கும் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளுக்கான தடைகள் நீங்கும். நோய்கள் அகலும், கவலைகள் போகும். உள்ளத்திலும், இல்லத்திலும் மகிழ்ச்சி நிறைந்து வாழ்க்கை வளமாகும்.
=====================