பங்குனி உத்திரம் 2026
பங்குனி உத்திரம் என்பது முருகப்பெருமானுக்கு மிக உகந்த நாள். பணி நிமித்தமாகவோ அல்லது உடல்நலக் குறைவு காரணமாகவோ பலரால் முழுமையாக விரதம் இருக்க முடிவதில்லை.
அன்பே சிவம், அன்பே முருகன்
ஆனால், அன்பே சிவம், அன்பே முருகன் என்ற கொள்கைப்படி, விரதம் இருக்க முடியாதவர்களும் கீழ்க்கண்ட எளிய வழிகளைப் பின்பற்றி முருகனின் முழு அருளையும் பெற முடியும்.
பங்குனி உத்திரம் விரதம் இருக்க முடியாதவர்கள் முருகனின் அருளைப் பெற என்னென்ன செய்யலாம்:
மனதிற்குள் மானசீக பூஜை
பங்குனி உத்திரத் திருநாளான இன்று விரதம் இருக்க முடியாத ஆன்மிக பக்தர்கள் உங்கள் மனதிற்குள்ளேயே அந்த அழகனை, முருகனை நினைத்து மானசீகமாக பூஜை செய்யலாம்.
ஆயிரம் விரதங்களுக்கு இணையான விரதம்
அலுவலகத்திலோ அல்லது பயணத்திலோ இருக்கும்போது, முருகனின் அழகிய உருவத்தை மனக்கண்ணில் நிறுத்தி, அவருக்கு மலர் சூட்டி, அபிஷேகம் செய்வது போல கற்பனை செய்து வழிபடுவது, ஆயிரம் விரதங்களுக்கு இணையான பலனைத் தரும்.
‘ஓம் சரவணபவ’
இன்றைய தினம் உங்களால் உணவைத் தவிர்க்க முடியாவிட்டாலும், மனதினால் முருகனின் பெயரை சொல்வது மிகச் சிறந்தது. உங்களால் முடிந்தால் ‘ஓம் சரவணபவ’ எனும் ஆறெழுத்து மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
கந்த சஷ்டி கவசம், திருப்புகழ்
பணியின் இடையே நேரம் கிடைக்கும்போது கந்த சஷ்டி கவசம் அல்லது திருப்புகழ் பாடல்களைக் கேட்கலாம் அல்லது முணுமுணுக்கலாம். ஒலியின் அதிர்வு எதிர்மறை எண்ணங்களை நீக்கி உங்கள் வாழ்வில் அருளைக் கூட்டும்.
அன்னதானம் , பசியாற்றுவதே பரமன் பணி
உங்களால் விரதம் இருக்க முடியாவிட்டாலும் பசியால் வாடும் யாரோ ஒருவருக்கு உணவளிப்பது முருகனுக்குச் செய்யும் மிகப்பெரிய தொண்டாக மாறும்.
அதனால் உங்களால் முடிந்தால் ஒருவேளை உணவை ஏழைகளுக்கோ அல்லது ஆதரவற்றவர்களுக்கோ மனதார வாங்கிக் கொடுத்து அவர்களின் பசியாற்றலாம்.
மேலும் பறவைகள் அல்லது விலங்குகளுக்கும் கூட உங்களால முடிந்த உணவு அளிக்கலாம். ஏழைப் பங்காளன் என போற்றப்படும் ஐயன் முருகனுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.
எளிய மாலை நேரத் தரிசனம்
பகல் முழுவதும் வேலைப்பளு காரணமாக எதையும் செய்ய முடியாவிட்டாலும், மாலையில் பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் அருகிலுள்ள முருகர் கோவிலுக்குச் சென்று ஒரு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
திருக்கல்யாண வைபவம்
கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை ஐந்து நிமிடம் தரிசிப்பது மன அமைதியையும் மங்கலத்தையும் கொடுக்கும்.
இல்லத்தில் விளக்கேற்றுதல்
வீட்டிற்கு சென்றவுடன் நீராடிவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி, முருகனுக்குப் பிடித்தமான வெல்லம் கலந்த பொரி அல்லது ஒரு பழத்தை நிவேதனமாக படைத்து வழிபடலாம்.
மனதார வேண்டுதல்
அப்படி வழிபடும் போது முருகா என் சூழ்நிலையால் இன்றைய நாளில் என்னால் விரதம் இருக்க முடியவில்லை ஆனால் என் மனம் முழுவதும் நீயே நிறைந்திருந்தாய். எனை ஆட்கொள்பவனே என் பக்தி உன்னிடம் உள்ளது என்று மனதார வேண்டிக்கொள்வதே போதுமானது.
அன்பிற்கு கட்டுப்பட்ட முருகன்
முருகப்பெருமான் அன்பிற்கு கட்டுப்பட்டவர். எனவே, உங்கள் சூழ்நிலையை உணர்ந்து, மற்றவர்களுக்கு உதவி செய்தும், மனதார அவரை நினைத்தும் வழிபட்டாலே இந்தப் பங்குனி உத்திரத்தின் முழுப் பலன்களும் உங்களுக்குக் கிட்டும்.
===