World’s Largest Shivalinga 33 Feet Statue Installation at Virat Ramayana Temple in Bihar Presence Of CM Nitish Kumar News in Tamil Google
ஆன்மிகம்

பீஹாரில் நிறுவப்பட்ட சிவலிங்கம்- முதல்வர் நிதிஷ்குமார் முன்னிலை!

பீஹாரில் கட்டப்பட்டு வரும் ராமாயண கோவிலுக்காக, தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட உலகின் மிகப்பெரிய 33 அடி உயர பிரமாண்ட சிவலிங்கம், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன்னிலையில் நிறுவப்பட்டது.

Baala Murugan

உலகின் மிகப்பெரிய ராமாயண கோவில்

World’s Largest Shivalinga 33 Feet Statue Installation at Virat Ramayana Temple in Bihar : முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பா.ஜ.- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு கிழக்கு சம்பாரண் மாவட்டம் மோதிஹாரி அருகே கைத்வலியா கிராமத்தில், மஹாவீர் மந்திர் அறக்கட்டளை சார்பில் பிரமாண்டமான விராட் ராமாயண கோவில் கட்டப்பட்டு வருகிறது. வரலாற்று மற்றும் ஆன்மிக சிறப்பு வாய்ந்த இந்த கோவில், உலகின் மிகப்பெரிய ராமாயண கோவிலாக உருவெடுத்து வருகிறது. தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின் அங்கோர்வாட் மற்றும் தமிழகத்தின் ராமேஸ்வரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களின் வடிவமைப்பில், 500 கோடி ரூபாய் செலவில் ராமாயண கோவில் கட்டப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

நிதிஷ்குமார் முன்னிலையில் நிறுவப்பட்ட லிங்கம்

இது, குறிப்பாகஉத்தர பிரதேசத்தின் அயோத்தி ராமர்கோவிலை விட மூன்று மடங்கு பெரிதாகும். இந்தக் கோவிலில், 33 அடி உயர பிரமாண்ட சிவலிங்கம் நிறுவப்பட்டது. வேதமந்திரங்கள் ஒலிக்க, ராட்சத கிரேன்கள் உதவியுடன் பிரமாண்ட சிவலிங்கம் நிறுவப்பட்டது. அப்போது, ஏராளமான பக்தர்கள், 'ஓம் நமசிவாய' என்ற முழக்கங்களை எழுப்பி வணங்கினர்.

மகாபலிபுரத்தில் உருவாக்கப்பட்ட 210 டன் எடை உள்ள இந்த சிவலிங்கம், இதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 96 சக்கரங்கள் உடைய ராட்சத டிரைலர் வாயி லாக பீஹாரின் மோதிஹாரி கொண்டு வரப்பட்டது. விழாவில், முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சயன் குனால் தகவல்

இது குறித்து, பீஹார் மாநில மத அறக்கட்டளை கவுன்சிலின் உறுப்பினர் சயன் குனால் கூறியதாவது: நிறுவப்பட்ட சிவலிங்கம், ஒரே பாறையில் செதுக்கப்பட்டது. இதனால், இது உலகின் மிகப்பெரிய சிவலிங்கமாக கருதப்படுகிறது. இந்த சிவலிங்கத்தில், 1,008 சிறிய சிவலிங்கங்கள் அடங்கியுள்ளன. இதை வணங்குவதன் வாயிலாக, 1,008 சிவலிங்கங்களை வணங்கிய ஆன்மிக பலனை பக்தர்கள் பெறுவர். தமிழகத்தில் தயாரான இந்த சிலை, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் வழியாக மோதிஹாரியை அடைய 45 நாள்களானது .

விராட் ராமாயண கோவிலுக்கு, 2023ல் அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதான கோவிலின் உயரம் 270 அடியாக இருக்கும். கோவில் வளாகத்தில் 18 கோ புரங்களும், பல்வேறு தெய்வங்களுக்கான 22 சிறிய கோவில்களும் இருக்கும்.ராமாயண கோவிலின் முதற்கட்ட கட்டுமான பணிகள், இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முழு கோவிலின் கட்டுமானப் பணிகள் 2030ல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.