10 year DMK alliance come to an end, Congress announced conditional support to form TVK govt google
தமிழ்நாடு

”TVK ஆட்சி அமைக்க ஆதரவு, காங்கிரஸ் முடிவு” : திமுகவுடன் கூட்டணி முறிந்தது! : மக்களவை, உள்ளாட்சி தேர்தலிலும் ஆதரவு...

தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் கூடிய ஆதரவு தர காங்கிரஸ் அறிவித்து இருப்பதால், 10 ஆண்டுகால திமுக கூட்டணி முடிவுக்கு வந்து இருக்கிறது.

Kannan

தவெக - 11 இடங்கள் தேவை

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 11 இடங்கள் தேவை, இன்று பிற்பகல் ஆளுநரை சந்திக்கும் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். நாளை அவர் பதவியேற்பார் எனத் தெரிகிறது.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

எம்எல்ஏக்கள் பதவியேற்பு முடிந்ததும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி இருக்கும். சபாநாயகர் தேர்தலே முதல் பரீட்சை, அதில் வெற்றி பெற்றால், அடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

ஆதரவு கோரிய விஜய்

இந்தநிலையில், திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆதரவை விஜய் கோரினார். தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் கூட்டணி அமைக்க ராகுல் விரும்பினார்.

ராகுல் விருப்பம் கனிந்தது

ஆனால், அப்போது நிறைவேறாத இந்த ஆசை, தேர்தலுக்கு பிறகு கனிந்து வந்து இருக்கிறது. இதுபற்றி, மூத்த தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார்.

தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு

இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கிரிஷ் சோடங்கர் சென்னை வந்து, தமிழக காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார். அதன் அடிப்படையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தருவது என காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளது.

காங்கிரஸ் 5 எம்எல்ஏக்கள்

திமுக கூட்டணியில் காங்கிரஸ், 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. அதன் அடிப்படையில் 5 பேரின் ஆதரவு தவெகவிற்கு உறுதியாகி இருக்கிறது.

நிபந்தனையோடு ஆதரவு

பாஜக கூட்டணிகளை சேர்க்க கூடாது என்ற நிபந்தனையோடு, தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கி இருக்கிறது.

திமுக கூட்டணி முறிந்தது

திமுகவுடன் 10 ஆண்டு கால கூட்டணி தேர்தலோடு முடிந்து விட்டது என்று தெரிவித்து இருக்கிறது காங்கிரஸ். இந்த முடிவு மூலம், இந்தியா கூட்டணியில் தவெக இடம் பெறுகிறது.

திமுக கடும் சாடல்

காங்கிரசின் இந்த முடிவுக்கு திமுக கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகிறது. காங்கிரஸ் முதுகில் குத்தி விட்டதாக திமுக செய்தித் தொடர்பாளர்கள் சாடி உள்ளனர். காங்கிரசின் 5 இடங்கள் வெற்றியும், திமுகவின் வியர்வையால் கிடைத்தது என்று, அவர்கள் தெரிவித்தனர்.

கிரிஷ் சோடங்கர் கருத்து

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்க தவெகவை மக்கள் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். எனவே, தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது.

மக்களவை, உள்ளாட்சி தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும். தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்றுவோம்.

காமராஜரின் ஆட்சியை காங்கிரசும், தவெகவும் கொண்டு வரும் என்று கூறினார்.

----