130-Year-Old World Record Broken: Nauman Ali Sets World Record by Taking 100 Test Wickets!
நோமன் அலி உலக சாதனை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இந்த வரலாற்றுச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
130 ஆண்டுகால உலக சாதனை முறியடிப்பு
தற்போது 39 வயது 217 நாட்களைக் கடந்துள்ள நோமான் அலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் மிக வயதான சுழற்பந்து வீச்சாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக, 1896-ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் பாபி பீல் (39 வயது 180 நாட்கள்) படைத்திருந்த சாதனையை, சுமார் 130 ஆண்டுகளுக்குப் பிறகு நோமான் அலி முறியடித்துள்ளார்.
100- வது சாதனை விக்கெட்
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், மெஹிதி ஹசன் மிராஜின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த 100-வது விக்கெட்டை அவர் எட்டினார்.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ உள்ளிட்ட மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றி அசத்தினார்.
தாமதமான அறிமுகம் - துரிதமான வளர்ச்சி
நோமன் அலி தனது 34-வது வயதில்தான் (2021-ல்) சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இவர் தனது 22-வது டெஸ்ட் போட்டியிலேயே 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம், அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் யாசிர் ஷா, சயீத் அஜ்மல் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோருக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆட்டத்தின் நிலை
நோமன் அலி தனிப்பட்ட முறையில் சாதனை படைத்திருந்தாலும், இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி கடும் சவாலை எதிர்கொண்டது.
268 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய அந்த அணி, 154 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. ஆட்டத்தின் இறுதியில் நோமன் அலி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
=====