சட்டமன்ற தேர்தல் 2026: தேர்தல் நடத்தை விதிகள்
TN Assembly Election 2026 Model Code of Conduct Rule : 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இது குறித்து அம்மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
1. திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களுக்கான விதிமுறைகள் :
கண்காணிப்பு தீவிரம்
அரசியல் கட்சியினருக்கு மண்டபங்களை வாடகைக்கு விடும்போது, அந்த விபரங்களை உடனே தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது வட்டாட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.
போலி விழாக்களை தடுக்க வேண்டும்
வளைகாப்பு, காதுகுத்து அல்லது பிறந்தநாள் விழா என்ற பெயரில் வாக்காளர்களுக்கு விருந்து வைப்பதோ, பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வேட்டி, சேலை போன்றவை வழங்குவதோ சட்டப்படி குற்றமாகும்.
ஆவணங்கள் கட்டாயம்
மண்டபம் முன்பதிவு செய்ய வருபவர்களிடம் திருமணப் பத்திரிகை, குடும்ப அட்டை நகல் போன்ற ஆதாரங்களைக் கட்டாயம் பெற்று, அதைப் பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்.
வெளியூர் நபர்கள் கவனத்திற்கு
ஏப்ரல் 4-ஆம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் யாரும் திருமண மண்டபங்களில் தங்குவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது.
2. அடகு நிறுவனங்கள் மற்றும் நகைக்கடைகளுக்கான எச்சரிக்கை
கூட்டு மீட்புத் தடை
வேட்பாளர்களோ அல்லது அவர்களது முகவர்களோ வாக்காளர்களின் அடகு வைத்த நகைகளை மொத்தமாக மீட்பதற்கு முயற்சி செய்தால், அதை அனுமதிக்கக் கூடாது.
நகை மீட்பு, சந்தேக நடவடிக்கைகள்
ஒரே நபர் பலமுறை வந்து நகைகளைத் திருப்ப முற்பட்டாலோ அல்லது டோக்கன் அல்லது அடையாள வில்லைகளைப் பயன்படுத்தினாலோ, அது குறித்து உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
சட்ட நடவடிக்கை
வாக்காளர்களைக் கவரும் வகையில் நகை மீட்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது.
3. ஆன்மீக மற்றும் பொது நிகழ்வுகள்
கோவில் பூஜைகள், அன்னதானம் அல்லது பொது விருந்து என்ற பெயரில் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதையோ அல்லது மறைமுகமாக செல்வாக்கு செலுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.
ஆட்சியரின் வேண்டுகோள்
சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடைபெற, வணிக நிறுவன உரிமையாளர்களும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.