வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்
SIR Form Fill Up in Tamil Nadu : தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நவம்பர் 4ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிசம்பர் 4-ம் தேதி வரை இந்தப் பணிகள் நடைபெறும்.
6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள்
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 68,467 பேர், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் 2,11,445 பேர் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அச்சடிக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களின் எண்ணிக்கை 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 582. அதாவது 100 சதவீதம் படிவங்கள் அச்சிடப்பட்டு இருக்கின்றன.
5 கோடியே 67 ஆயிரம் படிவங்கள் விநியோகம்
இதுவரை விநியோகிக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் எண்ணிக்கை 5 கோடியே 67 ஆயிரத்து 45 ( 78.09 சதவீதம்) என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமிப்பதற்கான மாற்றியமைக்கப்பட்ட அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பொதுவாக, வாக்காளர் பட்டியலின் குறிப்பிட்ட பாகத்தில் பெயர் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் ஒரு வாக்குச்சாவடி நிலை முகவராக இருப்பார்.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
இப்போது, வாக்காளர் பட்டியலின் குறிப்பிட்ட பாகத்தில் பெயர் பதிவு செய்த வாக்குச்சாவடி நிலை முகவர் கிடைக்காத பட்சத்தில், அதே சட்டப்பேரவை தொகுதியில் பெயர் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு வாக்காளரும் வாக்குச்சாவடி நிலை முகவராக நியமிக்கப்படலாம்.
வாக்குச்சாவடி நிலை முகவர் பணி
அவ்வாறு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர் தனது நியமிக்கப்பட்ட பகுதியின் வரைவு வாக்காளர் பட்டியலில், இறந்த அல்லது இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பதிவுகளை அடையாளம் காணும் பொருட்டு. ஆய்வு செய்வதற்கு முற்படுவர். தமிழகத்தில் 2,11,445 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, படிவங்களை கொடுத்து விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
=====