தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்
Aadhav Arjuna has said that Rajinikanth did not enter politics because of threats from DMK : தமிழக வெற்றிக் கழகம் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste survey) அரசாணையை தமிழ்நாடு உடனடியாக வெளியிட வலியுறுத்தியும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும் போராட்டம் நடத்தப்பட்டது.
திமுக அரசுக்கு கண்டனம்
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும், அதனை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னையை போன்றே தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அரசியலில் ஆர்வம் காட்டிய ரஜினி
சென்னை ஆர்பாட்டத்தில் பங்கேற்று பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, “எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பியவர்.
ரஜினியை மிரட்டிய திமுக
ஆனால் திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்து அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது ஆனால் அவர் இன்று என்ன ஆனார், கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்கச் சென்றுவிட்டார்.
மனவலிமை மிக்கவர் விஜய்
ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் அந்த மனவலிமை விஜயிடம் இருக்கிறது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். கரூர் சம்பவத்துக்குப் பின்னரும் நாங்கள் வெளியில் வந்துவிட்டோம். தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என விஜய் பயணிக்கிறார்.
கரைந்து போன மதிமுக
மாற்றம் உருவாக வேண்டும் என நினைத்த தலைவர்கள் தற்போது என்ன ஆனார்கள். மதிமுக தலைவர் வைகோ கட்சி ஆரம்பித்தபோது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுகவை சாடினார். ஆனால் தற்போது நான்கு சீட்டை பெற்று இருக்கிறார்.
அதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். ஒரு தொகுதியில் மட்டும் அவர்கள் சின்னத்தில் போட்டியிடுவார்களாம். இது என்ன கூட்டணி என எனக்குப் புரியவில்லை.
எதிர்த்தவர்கள், திமுக கூட்டணியில்...
2014ல் திருமாவளவன் திமுகவை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்தார் . தற்போது அவராலும் முடியவில்லை. கமல்ஹாசன் உட்பட அனைவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இறுதியில் அவரும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் நடிக்க சென்றுவிட்டார். அதன் பிறகு மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ், தற்போது திமுகவில் இணைந்துவிட்டார்.
அனைவரையும் மிரட்டும் திமுக
அப்படியென்றால் திமுகவின் பண பலத்தைப் பாருங்கள். எல்லாரையும் மிரட்டலாம், யாரையும் விலை கொடுத்து வாங்கலாம் என்று திமுக நினைக்கிறது.
விஜய்யை விலைக்கு வாங்க முடியாது
ஆனால் தமிழகத்தில் விலை கொடுத்து வாங்க முடியாத ஒரே தலைவர் விஜய் தான். அவர் வரும் தேர்தலில் நிச்சயம் சாதிப்பார். அவரது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது” என்று ஆதவ் அர்ஜுனா பேசினார்.
=======================