தவெக தேர்தல் பிரசார பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விடுத்துள்ள அறிக்கை :
சமூகநீதி அரசு என 'மூச்சுக்கு மூச்சு' விளம்பரப்படுத்திக் கொள்ளும் விளம்பர மாடல் தி.மு.க அரசு, உண்மையில், 'சமுக அநீதி' அரசாகவே செயல்படுகிறது. அதிலும் குறிப்பாக, பட்டியலின மாணவர்களின் கல்வி உரிமை, பட்டியலின மக்களின் சமூக உரிமை போன்ற விவகாரங்களில் கபட நாடகம் நடத்துவதையும், கள்ள மௌனம் சாதிப்பதையுமே, சமூக அநீதி தி.மு.க அரசு செய்து வருகிறது.
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து வருவதும், அதைக் கண்டும் காணாததுபோல், தி.மு.க அரசாங்கம் கண்ணை மூடிக் கொண்டிருப்பதும் அதை உறுதிப்படுத்துகிறது.
தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை புள்ளிவிபரங்களின்படி, 2021-க்கு முன்பாக, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 1 லட்சம் மாணவர்கள் படித்து வந்தனர். படிப்படியாக அந்த எண்ணிக்கை குறைந்தாலும், மிக மோசமான நிலைக்குப் போகவில்லை. ஆனால், 2021-க்குப் பிறகு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு, நிலைமை இன்னும் மோசமாக ஆரம்பித்தது. 2024-25 கல்வியாண்டின்படி, தமிழ்நாட்டில் உள்ள 1,138 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 77 ஆயிரத்து 383 மாணவர்கள் மட்டுமே சேர்ந்து படிக்கும் அபாயகரமான நிலை உருவானது.
இதற்கு, 'ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கூடங்களில் நிலவும் மோசமான உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சூழல்தான் காரணம்' என்கிறார்கள் கல்வியாளர்கள்.
இவற்றையெல்லாம் கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் பல ஆண்டுகளாக சுட்டிக்காட்டியபிறகும், கபட நாடக தி.மு.க அரசு அதைக் காதில்கூட வாங்கிக் கொள்ளவில்லை. ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் கட்டமைப்பை சரி செய்யவோ, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
பட்டியலின மாணவர்களின் கல்வியை இப்படி அழித்துக் கொண்டிருக்கும், 'சமூக அநீதி' தி.மு.க அரசு, அந்த மக்களின் சமுக உரிமை விவகாரங்களிலும் கள்ள மௌனம் காட்டுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறது.
வேங்கை வயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளியாக்கப்பட்டனர்; மேல்பாதி கிராமத்தில் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்லும் உரிமையை உறுதி செய்யவில்லை; வடகாடு கிராமத்தில் கோயிலுக்கு சென்ற பட்டியலின மக்களின் வீடுகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அதை இந்த அரசாங்கமும், முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குக் கீழ் இருக்கும் காவல்துறையும் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தன. நீதிமன்றம் அதைச் சுட்டிக்காட்டிய பிறகும்கூட, கொஞ்சமும் வெட்கமில்லாமல், 'வெற்று விளம்பர மாடல் தி.மு.க' அரசு, தான்தோன்றித்தனமாகவே இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, கடந்த நான்காண்டு திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள், சமூக பாகுபாடுகள், அச்சுறுத்தல்கள் போன்றவை அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.