Actor Vijay's film Janyayan is facing censorship and court issues, so it is likely to be released in May after the elections. 
தமிழ்நாடு

தேர்தலுக்கு பிறகே ‘ஜனநாயகன்’ : புதிய தகவல், ரசிகர்கள் ஷாக்

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம், சென்சார், நீதிமன்றம் என்ற சிக்கல்களில் இருப்பதால், தேர்தலுக்கு பிறகு மே மாதம் தாம் வெளியாகும் எனத் தெரிகிறது.

Kannan

இடியாப்ப சிக்கலில் ’ஜனநாயகன்’

vijay "Jananayagan" will be release after TN assembly elections, means May month : தமிழ்த் திரைத்துறையில் முன்னனி நடிகராக இருக்கும் நடிகர் விஜய்க்கு, லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். திரைத்துறையில் இருந்து அரசியலில் களம் இறங்கிய அவர், 2024ம் ஆண்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

தமிழக வெற்றிக் கழகம்

மதுரை மற்றும் விக்கிரவாண்டியில் இரண்டு மாநில மாநாடுகளை நடத்தி தமிழக அரசியலில் புயலை கிளப்பினார். திரண்ட கூட்டம் திராவிட கட்சிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. தேசியக் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தது.

கடைசி படம் ‘ஜனநாயகன்’

இதனிடையே, ’ஜனநாயகன்’ திரைப்படம் தான் தனது கடைசி திரைப்படம் எனவும் விஜய் அறிவித்தார். பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு ஏற்ப திரையரங்குகளிலும் ரசிகர்கள் பேனர்கள் வைத்தும், தோரணங்கள் கட்டியும் கொண்டாடி வந்தனர்.

சென்சார் சிக்கலில் ஜனநாயகன்

ஆனால் பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக சென்சார் சான்றிதழ் கிடைக்காத நிலை உருவானது. இதனையடுத்து நீதிமன்றத்தில் படக்குழு முறையிட்ட நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் விசாரணை நடத்திய தனி நீதிபதி, படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

படத்தை திரையிட முடியவில்லை

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் சென்சார் குழு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டது. இதன் காரணமாக பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகாத நிலை உருவானது. இதனையடுத்து கடந்த வாரம் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று ஜனநாயகன் திரைப்படம் தொடர்பாக தீர்ப்பு வெளியானது.

தனி நீதிபதி விசாரிக்க உத்தரவு

அதில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு செல்லாது எனவும், படத்தில் மதம் சார்ந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த நீதிபதி, மீண்டும் தனி நீதிபதியே ஜனநாயகன் திரைப்படத்திற்கான விசாரணையை நடத்தி தீர்ப்பு வழங்க உத்தரவிடப்பட்டது.

மீண்டும் முதலில் இருந்து...

இதனால் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் ஜனநாயகன் படம் வந்துள்ளதால் படம் தற்போது உள்ள நிலையில் வெளியாக வாய்ப்பு குறைந்துள்ளது.

எனவே அடுத்தாக தனி நீதிபதி விசாரணை நடத்தி உத்தரவிட குறைந்தது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஆகும் எனத் தெரிகிறது.

பிப்ரவரியில் தீர்ப்பு கிடைக்குமா?

பிப்ரவரி 2வது வாரம் தீர்ப்பு வந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதையும் தாண்டி படம் வெளியாக அனுமதி கிடைத்தாலும் பிப்ரவரி மாதம் எந்தவித தொடர் விடுமுறை நாட்களும் இல்லை. ஆண்டு இறுதி தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருவார்கள்.

எனவே, பிப்ரவரி மாதம் ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட முடியாத நிலை உருவாகியுள்ளது. அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி மார்ச் மாதம் முதல் வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் வந்தால் படத்திற்கு சிக்கல்!

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் போட்டியிடும் கட்சியின் தலைவர் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படும். எனவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் இறுதி வரை படத்தை வெளியிடுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.

மே மாதம் படம் ரிலீஸ்?

எனவே சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு மே மாதம் பள்ளி விடுமுறை நாட்களில் தான் படத்தை வெளியிடுவதற்கான வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் ஷாக்

எனவே ஜனநாயகன் திரைப்படத்தை பார்க்க இன்னும் 3 முதல் 4 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

==============