பொதைப்பொருள் புழக்கம்
திருத்தணியில் வட மாநிலத்தை சேர்ந்த நபரை போதையில் நான்கு பேர் வெட்டியது, தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதேபோன்று, பல்வேறு இடங்களில் நடைபெறும் தாக்குதலின் பின்னணிக்கு போதைப்பொருளே முக்கிய காரணமாக இருக்கிறது.
தமிழகத்திற்கு விடியல் வரவில்லை
இந்தநிலையில், திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக கலை, கலாசார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்துாரி, “ விடியல் தரப்போகிறார் என ஒருவரை சொன்னார்கள்.
ஐந்தாண்டுகளாகி விட்டது. விடியல் தான் வரவில்லை. புலம்பெயர் தொழிலாளரை கத்தியால் தாக்கிய அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் திருத்தணியில் ஜமால் என்பவர் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.
வட இந்தியர்களை கேலி பேசுவதா?
தமிழகத்தில் போதை மட்டுமே உள்ளது. திராவிட இயக்கத்தை தொடங்கும் போது பிராமண சமூகத்தை வந்தேறி என்றார்கள். பிறகு வட இந்தியர்களை கூறினர். அதன் பின்பு பாஜக தமிழகத்திற்குள் வந்துவிடும் என பூச்சாண்டி காண்பித்தார்கள். தற்போது வடக்கிலிருந்து வயிற்று பிழைப்பிற்காக வருபவர்களை வடக்கன், பீடா வாயன் என அமைச்சர்களே பேசுகிறார்கள்.
தமிழகம் வர அஞ்சுகிறார்கள்
அவன் நம்ம ஆள் இல்லை என்ற விஷத்தை பரப்பி விட்டார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வருவதற்கு தற்போது பயப்படுகிறார்கள். தமிழகத்தில் வசிப்பவர்களே நிம்மதியாக வாழ முடியவில்லை.
சாராயமும், போதைப்பொருளும்
தமிழகத்தில் மூலைக்கு மூலை சாராயமும், போதைப்பொருட்களும் தாராளமான கிடைக்கின்றன. கேட்டால் இரும்பு கரம் கொண்டு அடக்குகிறோம். எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது எனக் கூறுகிறார்கள்.
கடவுளாலும் காப்பாற்ற முடியாது
ஒரு காலத்தில் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்ன ரஜினி, இன்று என்ன சொல்கிறார். தமிழகத்தில் ஜீரோ சதவீதம் தான் கஞ்சா உள்ளது என அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகிறார். ஆனால் உயர்வகை கஞ்சா கிலோ கிலோவாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பிடித்திருக்கிறார்கள்.
'யார் அந்த சார்' என்று கேள்விக்கு 'யாருமே இல்லை' என்று சொன்னார்கள். இப்போது 'எங்கே அந்த கஞ்சா' என்று கேட்டால், 'எங்கேயும் இல்லை' என்று தான் சொல்வார்கள்” இவ்வாறு நடிகை கஸ்தூரி பேட்டியளித்தார்.
===============