ADMK Chief Edappadi Palaniswami has accused DMK of betraying Delta farmers News in Tamil Google
தமிழ்நாடு

டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் செய்வது யார்?-கேள்விகளை அடுக்கிய EPS

Edappadi Palaniswami Slams DMK on Delta Farmers : டெல்டா விவசாயிகளுக்கு திமுக பச்சைத் துரோகம் செய்வதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Kannan

திமுக ஆட்சியில் விவசாயிகள் வஞ்சிப்பு

Edappadi Palaniswami Slams DMK on Delta Farmers : இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் அவர், ”திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். துணை முதலமைச்சராக இருந்தபோது மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த முதலமைச்சர் ஸ்டாலின், துரோகத்தைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.

விவசாயிகளின் துரோகி திமுக

ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு, காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, அந்தக் கட்சி ஆட்சி செய்யும் கர்நாடகாவில் தமிழக விவசாயிகளின் எதிர்காலத்தைப் பாழாக்கும் மேகதாது அணையை கட்டுவதற்கு கூட்டு சதி செய்துகொண்டு நாடகமாடும் ஸ்டாலின், டெல்டா விவசாயிகளின் துரோகி இல்லையா?

நெல் கொள்முதல் - வயிற்றில் அடிப்பு

விவசாயிகள் உழைத்து விளைவித்த நெல்லை முறையாக கொள்முதல் செய்யாமல் மழையில் நனையவிட்டு விவசாயிகள் வயிற்றில் அடித்த திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளின் துரோகி இல்லையா..? நெல் ஈரப் பதத்திற்கான வரம்பை உரிய நேரத்தில் மத்திய அரசின் ஆணையைப் பெற்று உயர்த்தத் தவறிய முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளின் துரோகி இல்லையா..?

வீணான நெல் மணிகள் - யார் துரோகி?

இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் கொள்முதல் செய்த நெல்லை உடனடியாக சேமிப்புக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லாததாலும்; தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காததாலும், சாக்கு மற்றும் சுமை தூக்கும் பணியாளர்கள் இல்லாததாலும்; லாரிக்கான வாடகை முடிவு செய்யப்படாததால், இந்த ஆண்டு டெல்டா விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்த நெல்லை, இந்த அரசு கொள்முதல் செய்ய பல நாட்களுக்குமேல் ஆனதுதானே உண்மை. மழையால் நெல் மணிகள் வீணானது நாம் அறிந்த ஒன்று தான்.

22% ஈரப்பதம் - கோட்டை விட்ட திமுக

குறுவை சாகுபடி காலத்தில் மழை பெய்யும் என்பதால் ஈரப் பதம் 22% வரை இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, எங்கள் ஆட்சியில் நாங்கள் உரியவாறு மத்திய அரசின் தளர்வுக்கு முயற்சிகள் மேற்கொண்டு விலக்கு பெற்றுவிடுவோம். ஆனால், ஸ்டாலின் இதை உரிய நேரத்தில் செய்யத் தவறியது மட்டுமல்ல, மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டதாக திசை திருப்புவது என்?

டெல்லி செல்ல என்ன தயக்கம்?

தன் சொந்த பிரச்சினைகளுக்கு, டெல்லிக்கு ஓடோடிச் செல்லும் ஸ்டாலின், பொதுமக்கள் பிரச்சனையில், குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்களின் பிரச்சனையில் பாராமுகம் காட்டுவது ஏன்? போராட்டம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது ஏன்?

திமுக அரசுக்கு கண்டனம்

தமிழக முதலமைச்சராக உள்ள ஸ்டாலின், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு, மத்திய அரசை வலியுறுத்தி தளர்வை பெறத் தவறியது. விவசாயிகளுக்கு செய்த துரோகமாகும். விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் எடப்பாடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

==================