நிலைப்பாட்டில் எடப்பாடி உறுதி :
EPS Removed Sengottaiyan From ADMK : அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், சசிகலா, தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பாஜகவும் பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்தது. ஆனால், எதற்கும் பிடி கொடுக்காத பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி(Edappadi Palaniswami), மூன்று பேருக்கும் கட்சியில் மீண்டும் இடமில்லை என்பதில் இன்று வரை உறுதியாக நிற்கிறார்.
எடப்பாடிக்கு செங்கோட்டையன் கெடு :
இதனிடையே 6 மாத காலமாக எடப்பாடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று அதிரடியாக பேட்டி அளித்து பரபரப்பை கிளப்பினார். கட்சியில் இருந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும், அதாவது சசிகலா, ஓபிஎஸ், தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார்.
நிலைப்பாட்டில் எடப்பாடி உறுதி :
இது அதிமுகவில் புயலை கிளப்பியது. செங்கோட்டையன் கருத்துக்கு சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆதரவு தெரிவித்தனர். தமிழக பாஜகவும் இதனை வரவேற்று இருந்தது. எடப்பாடி என்ன முடிவை எடுக்க போகிறார்? செங்கோட்டையன் நிபந்தனைக்கு பணிவாரா? அல்லது செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை :
இந்தநிலையில், தனது சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக திண்டுக்கலில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். செங்கோட்டையனின் கோரிக்கை, சசிகலா, தினகரன், ஓபிஎஸ்-சை கட்சிக்குள் சேர்த்தால் அடுத்த ஏற்படும் விளைவுகள் பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் :
இதைத்தொடர்ந்து, அதிரடி நடவடிக்கை எடுத்த எடப்பாடி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி இருக்கிறார்(Sengottaiyan Removed). அவரது ஆதரவாளர்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம், பிரிந்து சென்றவர்களுக்கு கட்சியில் ஒருபோதும் இடமில்லை, இது தொடர்பாக யார் எதிர்ப்பு குரல் கொடுத்தாலும், நடவடிக்கை என்பதை உணர்த்தி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி நடவடிக்கை - செங்கோட்டையன் வரவேற்பு :
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த செங்கோட்டையன், நடவடிக்கையை மகிழ்ச்சியாக வரவேற்பதாக கூறி இருக்கிறார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் தான் இவ்வாறு வலியுறுத்தியதாக அவர் தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து, அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி, தனது ஆதரவாளர்களுடன் கோபியில் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
என்ன செய்வார் செங்கோட்டையன் ? :
செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியதன் பின்னணியில் திமுக இருப்பதாக கூறப்படும் நிலையில், மைத்ரேயன், அன்வர்ராஜா வழியில் அவர் திமுகவுக்கு செல்வாரா? அல்லது தனிக்கட்சி தொடங்கி, தினகரன், ஓபிஎஸ் உடன் கைகோர்த்து செயல்படுவாரா என்பது இனிமேல் தான் தெரிய வரும்.
மேலும் படிக்க : ’ஒன்றுபட்ட அதிமுக’: EPSக்கு 10 நாள் கெடு:மனம் திறந்த செங்கோட்டையன்
எச்சரிக்கை விடுத்த எடப்பாடி:
அதிமுகவில் எம்ஜிஆர் காலம் தொட்டு முக்கிய பொறுப்புகளில் இருந்த செங்கோட்டையன் நீக்கப்பட்டு இருப்பது, தனது எதிர்ப்பாளர்களுக்கு எடப்பாடி தந்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
=====