பிரிந்து கிடக்கும் அதிமுக :
ADMK Ex Minister Sengottaiyan vs Edappadi Palaniswami : அதிமுக எடப்பாடி தரப்பு, ஓபிஎஸ் தரப்பு, சசிகலா தரப்பு என்ற மூன்றாக பிரிந்து கிடக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.
எடப்பாடி மீது மறைமுக தாக்கு :
அதிமுகவை எப்படியாவது ஒன்றிணைக்க வேண்டும் என்று பாஜக எடுத்த எந்த முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமி கை கொடுக்கவில்லை. சசிகலா, ஓபிஎஸ், தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை என்பதில் அவர் உறுதியாக நிற்கிறார். அதிமுக ஒன்றிணையா விட்டால் 2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு கிடைக்காது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. எந்த நிபந்தனை இன்றி இணைய சசிகலா, ஓபிஎஸ் தயாராக இருந்தாலும், அதை ஏற்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை.
மனம் திறந்தார் செங்கோட்டையன் :
இந்தநிலையில் 6 மாத காலமாக எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் மூத்த நிர்வாகி செங்கோட்டையன்(Sengottaiyan Latest News), அவரை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். கடந்த மூன்று நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன், 5ம் தேதி தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.
அதன்படி, கோபியில் இன்று செங்கோட்டையன் ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தனக்கு அளித்த முக்கியத்துவத்தை விளக்கமாக எடுத்துக் கூறினார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்... :
1972ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது, கட்சியில் தன்னுடைய ஈடுபாட்டை பார்த்து, கோவையில் கட்சியின் பொதுக்குழுவை நடத்த தனக்கு உத்தரவிட்டதை சுட்டிக் காட்டினார். இதன்மூலம் மகிழ்ச்சி அடைந்த எம்ஜிஆர், சத்தியமங்கலம் தொகுதியில் தன்னை போட்டியிட வைத்ததாகவும், அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சியில் தனக்கு தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கியதாக குறிப்பிட்டார்.
ஒன்றிணைந்தால் தான் வலிமை, வெற்றி :
2016 தேர்தலுக்கு பிறகு அதிமுக சந்தித்து வரும் சவால்களை எடுத்துக் கூறிய செங்கோட்டையன், 2024 தேர்தலில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என அனைவரும் கூறினோம். அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர் ( எடப்பாடி பழனிசாமி ) இல்லாததால் தோல்வியை தழுவினோம் என்றார்.
2026 ஆட்சியை பிடிப்பதே இலக்கு :
எங்கள் கருத்துகளை ஏற்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வெளியே சென்றவர்களை இணைக்க வேண்டும் என பழனிசாமியிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். எனவே, யதார்த்த நிலையை உணர்ந்து,
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்ஜிஆர், ஜெயலலிதா நல்லாட்சியை தமிழகத்தில் தர அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே தனது வேண்டுகோள் என செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
எடப்பாடிக்கு பகிரங்க வேண்டுகோள் :
வெளியே சென்றவர்கள் எந்த நிபந்தனையும் இல்லை, எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் கோரிக்கை வைத்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதற்காக அதிமுக மூத்த தலைவர்கள் 6 பேர் எடப்பாடியிடம் பேசினோம்.
எடப்பாடிக்கு 10 நாட்கள் கெடு :
எனவே, கட்சியின் பொதுச் செயலாளர் இதை செய்ய 10 நாட்கள் அவகாசம் தருகிறேன். அவ்வாறு சேர்க்கா விட்டால், கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புவர்கள் சேர்ந்து அதை செய்வோம் என்று செங்கோட்டையன் கூறினார்.
என்ன செய்வார் எடப்பாடி? :
எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருக்கும் நிலையில், அவர் என்ன செய்யப் போகிறார்? கோரிக்கையை ஏற்பாரா? அல்லது யாரையும் சேர்க்காமல் தனது வழியில் பயணிக்க போகிறாரா என்பதே அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
===================