தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி
தமிழகத்தில் 1967 வரை காங்கிரஸ் கட்சிதான் அரியணையில் இருந்தது. அண்ணாதுரை தலைமையிலான திமுக முதன்முறையாக 1967ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
திமுக, அதிமுக ஆட்சி
அதன்பிறகு காங்கிரசால் ஒருமுறை கூட அரியணை ஏற முடியவில்லை. அதிகாரத்திலும் பங்கு பெறவில்லை. திமுகவும், அதிமுகவும் மாறிமாறி ஆட்சியில் இருந்ததால், இரண்டு திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தான் காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது.
திமுகவும், அதிமுகவும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்பதில் உறுதியாக இருந்தன. இதனால், அதிகாரத்தில் பங்கு என்பதை நினைத்து காங்கிரசால் ஏங்க மட்டுமே முடிந்தது.
2026ல் திரும்பிய வரலாறு
ஆனால், 2026ல் வரலாறு திரும்பியது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி மக்களை ஈர்த்தார். அவருக்கு கூடும் கூட்டம் திராவிட கட்சிகளை பயமுறுத்த, தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி என்ற பேச்சும் எழுந்தது.
கூட்டணி ஆட்சி - விஜய் உறுதி
இதற்கு ஆதரவாக காங்கிரசிலும் குரல்கள் ஒலித்தன. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி என்று விஜய் அறிவிக்க, பரபரப்பு பற்றிக் கொண்டது.
5 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் நீடிக்க முடிவு செய்யப்பட்டது. 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்றது.
தவெகவுடன் கைகோர்த்த காங்கிரஸ்
தவெகவிற்கு பெரும்பான்மை இல்லாததால், இந்த முறை துணிச்சலாக முடிவு எடுத்த காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்து விலகி, விஜயுடன் கைகோர்த்தது.
விஜய் தலைமையில் அமைச்சரவை
இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல், கட்சிகளும் ஆதரவு தர, முதல்வராக விஜய் 10ம் தேதி பொறுப்பேற்றார். புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உட்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
தமிழக அமைச்சரவை விரிவாக்கம்
நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் கைகொடுக்க, 144 பேரின் ஆதரவோடு வெற்றி பெற்றார் முதல்வர் விஜய். இந்தநிலையில், தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அமைச்சரவை விரிவாக்கத்திற்காக, ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு தவெக அரசு அழைப்பும் விடுத்தது.
காங்கிரசுக்கு இரண்டு இடம்
காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான வழக்கறிஞர் ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோர் அந்த அமைச்சரவையில் இடம்பெற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ்
இதன்மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 1967 பிறகு வரலாறு திரும்பி இருக்கிறது.
காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
இதுதொடர்பாக தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள பதிவில், "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களான வழக்கறிஞர் ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோரைத் தமிழ்நாடு அமைச்சரவையில் சேர்கின்றனர்.
59 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவையில் இணைவதால், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக இது பார்க்கப்படுகிறது.
=================