Ahead of Pongal festival 2026, MTC Chennai Metropolitan Transport Corporation has introduced a hop-on hop-off bus service MTC
தமிழ்நாடு

பொங்கலுக்கு ஊரு சுத்துங்கள் : சென்னையில் ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப் சேவை!

MTC Hop-on Hop-Off Bus Service in Chennai : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப் எனும் பேருந்து சேவையை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Baala Murugan

ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப் சேவை தொடக்கம்

MTC Hop-on Hop-Off Bus Service in Chennai : பொங்கல் பண்டிகை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நகரின் முதன்மை பொது பேருந்து நிறுவனமான சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், ஒரு அற்புதமான நகர சுற்றுலா அனுபவத்தை வழங்கத் தொடங்குகிறது. சென்னை உலா பேருந்து "ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப்" சேவைகளுடன் முதன்முதலில் 5 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

கலாச்சார பகுதிகள் இணைப்பு

மேலும், அவை சென்னையின் மையப்பகுதியில் உள்ள சின்னமான மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்க வடிவமைக்கப்பட்ட வட்டச் சுற்றுப் பாதையில் இயக்கப்படும்.

இதனால் பண்டிகைக் காலத்தில் நகரின் பாரம்பரிய அடையாளத்தை சென்னை வாழ் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்டுகளிக்க முடியும்.

பழங்கால மற்றும் பாரம்பரியத்துடன் கூடிய 5 பேருந்துகள்

பழங்கால/பாரம்பரியம்-1980களின் காலகட்ட பேருந்துகள் - சென்னையின் பொதுப் போக்குவரத்து பரிணாமத்தை நினைவு கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் குறிப்பிடப்பட்டுள்ள நிறுத்தத்திலும் ஏறவும் இறங்கவும் கூடிய ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப் (HO-HO) மாதிரி - அணுகல் மற்றும் வசதி உள்ளது.

குறிப்பாக மகளிர், வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பள்ளி குழுக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நன்மை பயக்கும். இந்த பாரம்பரியப் பேருந்தில், மாற்றுத்திறனாளிகளும் எளிதாகப் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் உள்ள சிறப்பு சேவைகள்

சென்னையில் உள்ள முக்கிய வரலாற்று, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு அடையாளங்களை இணைக்கும் வகையில் 30 கி.மீ நீளமுள்ள ஒரு வளையமாக இந்தப் பாதை திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரே ஒரு பயணச்சீட்டு மூலம் நாள் முழுவதும் பயணம் செய்வதற்குரிய கட்டணம் - ரூ. 50 மட்டுமே. சென்ட்ரல் ரயில் நிலையம். எழும்பூர் ரயில் நிலையம், மெரினா கடற்கரை மற்றும் நடத்துனரிடம் இருந்து இதற்குரிய பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், சென்னை ஒன் செயலி வழியாக மின்னணு பயண சீட்டுகள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் சொகுசுப் பேருந்து (Deluxe) கட்டணத்தில் மற்ற பேருந்துகளைப் போல இப்பேருந்தில் பயணிக்கலாம்.

ஜன.16முதல் சேவை

பொங்கல் பண்டிகை காலத்தில் இந்த சேவை ஜனவரி 16 முதல்18ம் தேதி காலை 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும் இயக்கப்படும். வார நாட்களில் மாலை 4:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும், வார இறுதி நாட்கள்/பொது விடுமுறை நாட்களில் காலை 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும் இயக்கப்படும்.

அடுத்தடுத்த பேருந்து சேவை 30 நிமிட இடைவெளியுடன் இருக்கும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வின்டேஜ் பேருந்துகள் அறிமுகம்

இதைப் போல் வின்டேஜ் தோற்றத்தில் உள்ள பேருந்துகள் உலகளவில் முக்கிய நகரங்களில் பயன்படுத்தப்படுகிறது. நமது சென்னை மாநகரத்திலும் மக்கள் சேவையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) "சென்னை உலா" பாரம்பரியப் பேருந்து விருப்பமான நிறுத்தத்தில் ஏறி பிடித்தமான இடத்தில் இறங்கி ரசிக்கலாம். மீண்டும் அடுத்து வரும் "சென்னை உலா" பேருந்தில் உங்கள் பயணத்தைத் தொடரலாம்.

இந்த முயற்சி பொங்கல் கொண்டாட்டங்களுக்கு மதிப்பு சேர்ப்பது மட்டுமல்லாமல் நகர்ப்புற கலாச்சார அனுபவங்களுடன் பொது போக்குவரத்தை ஒருங்கிணைப்பதற்கான ஒரு முன்னுதாரணத்தையும் உள்ளடக்கியது.

இனிவரும் விழாக்களில் இதேபோன்ற பாரம்பரியம் மற்றும் சுற்றுலா இயக்க சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் இப்பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.