ரஷ்யாவில் உள்ள மின்னணுப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில், தன்னைத் தள்ளிய வாடிக்கையாளரை மனித உருவிலான (Humanoid) ரோபோ ஒன்று கோபத்துடன் தாக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.
சரடோவ் நகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ரஷ்யாவின் சரடோவ் நகரில் அமைந்துள்ள மின்னணுப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் ‘சியோமா’ என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு ரோபோ வாடிக்கையாளர்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
திடீர் தாக்குதல் முயற்சி
கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் அந்த ரோபோவை எதிர்பாராதவிதமாகத் தள்ளியுள்ளார். இதனால் நிலைகுலைந்து கீழே விழப்போன ரோபோ, உடனடியாகத் தன்னை சாதுரியமாக சரிசெய்து கொண்டு நிமிர்ந்து நின்றுள்ளது.
உதைக்க முயன்ற ரோபோ
தனக்கு ஏதோ ஆபத்து அல்லது அச்சுறுத்தல் ஏற்படுவதாக தவறாகப் புரிந்து கொண்ட அந்த ஏஐ ரோபோ, தள்ளிய அந்த வாடிக்கையாளரை நோக்கி வேகமாக நகர்ந்து, தனது காலை உயர்த்தி அவரை உதைக்க முயன்றுள்ளது.
'எந்திரன்' சிட்டி பாணியில் பரபரப்பு
சூழ்நிலை கைமீறி போவதையும் ரோபோவின் கோபத்தையும் உணர்ந்த கடையின் ஊழியர்கள், உடனடியாகத் தலையிட்டு அந்த ரோபோவை மடக்கிப் பிடித்து அதன் செயல்பாட்டை (Off) செயலிழக்கச் செய்தனர். இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சிட்டிக்கு கோபம் வந்துருச்சு
'எந்திரன்' திரைப்படத்தில் சிட்டி ரோபோவுக்குக் கோபம் வருவது போல நடந்த இந்த நிஜ சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் "சிட்டிக்கு கோபம் வந்துருச்சு" என்ற கேப்ஷனுடன் வைரலாகி வருகின்றன.
எலான் மஸ்க் கணிப்பும் ஏஐ அச்சுறுத்தலும்
உலகம் முழுவதும் ரோபோடிக்ஸ் தொழில் நுட்பத்தில் பெரும் புரட்சி நடந்து வருகிறது. குறிப்பாக சீனாவில் உணவகங்களில் உணவு பரிமாறுவது முதல் பல்வேறு துறைகளிலும் ரோபோக்கள் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எலான் மஸ்க்கின் கூற்று
"இன்னும் 10 ஆண்டுகளில் உலகில் 100 கோடிக்கும் அதிகமான ரோபோக்கள் உருவாக்கப்பட்டு, மனிதர்களின் அன்றாட வேலைகளைச் செய்யத் தொடங்கும்" என்று தொழிலதிபர் எலான் மஸ்க் சமீபத்தில் கூறியிருந்தார்.
ரோபோவின் செயலால் எழுந்த அச்சம்
இத்தகைய சூழலில், ஒரு ஏஐ ரோபோ மனிதரை திருப்பித் தாக்க முயன்ற இச்சம்பவம், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித உருவ ரோபோக்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் ஒரு சிறிய அச்சுறுத்தலையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.
======