AIADMK election manifesto made 297 promises, including free refrigerator for family card holders google
தமிழ்நாடு

ADMK Election Manifesto : ரூ.10,000 + விலையில்லா ஃபிரிட்ஜ் : ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, மகளிருக்கு ரூ. 2,000

குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா ஃபிரிட்ஜ் உள்பட 297 வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டு இருக்கின்றன.

Kannan

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் களம் தகித்துக் கொண்டிருக்கும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தனது விரிவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அரசியல் அரங்கில் அதிரடியை கிளப்பி உள்ளது.

"மக்களுக்காக நாம், மக்களுடனேயே நாம்"

"மக்களுக்காக நாம், மக்களுடனேயே நாம்" என்ற தாரக மந்திரத்தோடு, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், சாமானிய மக்களைக் கவரும் வகையில் ‘மெகா’ அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

விலையில்லா ஃபிரிட்ஜ்

தேர்தல் அறிக்கையின் சிகரமாகப் பார்க்கப்படுவது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக ஃபிரிட்ஜ் (குளிர்சாதனப் பெட்டி) வழங்கப்படும் என்ற அறிவிப்பு.

ஜெயலலிதா வழியில் எடப்பாடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வழங்கிய மிக்சி, கிரைண்டர் திட்டங்களின் தொடர்ச்சியாக, பெண்களின் வீட்டுவேலை பளுவைக் குறைக்கவும், உணவுப் பொருட்களைப் பாதுகாக்கவும் இந்தத் திட்டம் கொண்டு வரப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது.

மருத்துவ படிப்பு 10% இடஒதுக்கீடு

அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீடு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது அதனை விரிவுபடுத்தும் விதமாக ஒரு படி மேலே சென்று, 10 சதவீதமாக உயர்த்துவோம் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்க இந்த 2.5% கூடுதல் இடஒதுக்கீடு மிகப்பெரிய ஊக்கமருந்தாக அமையும்.

மகளிருக்கு மாதம் ரூ.2,000

தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகையை இரட்டிப்பாக்கி, மாதந்தோறும் ரூ.2,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.10,000 ‘ஆறுதல் தொகை’

இதுமட்டுமன்றி, விலைவாசி உயர்வைச் சமாளிக்க அனைத்துக் குடும்பங்களுக்கும் ஒருமுறை நிதியுதவியாக ₹10,000 ‘ஆறுதல் தொகை’ வழங்கப்படும் என்ற அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 எரிவாயு சிலிண்டர் இலவசம்

ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம். மாணவர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கல்விக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.

ஆண்களுக்கு இலவச பயணத் திட்டம்

மகளிரைப் போலவே ஆண்களுக்கும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் விரிவாக்கப்படும். நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ₹3,500 ஆகவும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ₹4,500 ஆகவும் உயர்த்தப்படும்.

மீனவர் உயிரிழந்தால் 25 லட்சம்

கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பத்திற்கு ₹25 லட்சம் இழப்பீடு.

விலையில்லா பருப்பு, சமையல் எண்ணெய்

அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் விலையின்றி தரப்படும்

படிப்படியாக மதுவிலக்கு

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் வகையில் படிப்படியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணையதள நிருபர்களுக்கும், அரசு அங்கீகார அட்டை, மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியம் பாரபட்சமின்றி வழங்கப்படும்.

பொங்கலுக்கு பரிசுதொகுப்போடு ரூ.1,000

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிக்கைக்காக பரிசுத் தொகுப்பும், தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

மாணவர்களுக்கு 6 பாடங்கள்

வளர்ந்து வரும் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவியல் துறையில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கிட, 6 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே உள்ள ஜந்து பாடங்களுடன், கணினி அறிவியலை சேர்த்து ஆறு பாடங்களாக கற்பிக்கும் வகையில் பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படும்

வீடு இல்லாதவர்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.

தேர்தல் அறிக்கைகள்

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு போட்டியாகவும், விஜயின் தேர்தல் அறிவிப்புகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 297 வாக்குறுதிகள் அடங்கிய விரிவான தேர்தல் அறிக்கையை அதிமுக வெளியிட்டு இருக்கிறது.

தேர்தல் அறிக்கை - திருப்புமுனையா?

இளைஞர்கள், இல்லத்தரசிகளை கருத்தில் கொண்டு, கிராமப்புற மற்றும் நடுத்தர வாக்காளர்களை தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக, 2026 தேர்தலில் எத்தகைய வெற்றியை பெறப்போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

=============