பிப். இறுதியில் தேர்தல் தேதி?
தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது. இதற்கான அறிவிக்கை பிப்ரவரி இறுதியில் வெளியிடப்படும் என டெல்லி தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள்
தேர்தலுக்கு இரண்டு மாத காலமே இருப்பதால், அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கி விட்டு இருக்கின்றன. கூட்டணிகளை இறுதி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி விஜய் தலைமையில் மற்றொரு கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்ற நான்கு முனை போட்டிக்கு இப்போது வரை வாய்ப்பு இருக்கிறது.
தவெக கூட்டணியில் காங்கிரஸ்?
நடிகர் விஜய் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால், திமுக கூட்டணியில் மாற்றங்கள் இருக்கும். கூட்டல் கழித்தல் கணக்குகளும் மாறும். எனவே, அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்ப்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.
அதிமுக அலுவலகம் - எம்ஜிஆர் பிறந்தநாள்
இந்தநிலையில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாட்டப்பட்டது.
சென்னை அதிமுக கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதை தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அதிமுக முதல் தேர்தல் அறிக்கை
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
மகளிருக்கு மாதம் ரூ.2,000
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
1. மகளிர் நலன்: (குல விளக்குத் திட்டம்) : சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000/- வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
2. ஆண்களுக்கும் இலவச பேருந்து : நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
3. அனைவருக்கும் வீடு (அம்மா இல்லம் திட்டம்) : 'அம்மா இல்லம் திட்டம்' மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி 'அம்மா இல்லம் திட்டம்' மூலம் விலையில்லாமல் வழங்கப்படும்.
அதைப் போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
4. 100 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் : 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.
5. அம்மா இருசக்கர வாகனம் திட்டம்: மகளிருக்கு ரூ. 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
================