அதிமுகவில் பிளவு
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அதிமுக 2 ஆக 3 ஆக என பிளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சி.வி. சண்முகம், வேலுமணி ஆதரவு தரப்பை சேர்ந்த 25 பேர், நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசை ஆதரித்தனர்.
எடப்பாடி தரப்பில் 22 பேர் எதிர்த்து வாக்களித்தார்கள். ஆதரவாக செயல்பட்ட 25 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, எடப்பாடி தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்தது.
அமைச்சரவையில் இடமில்லை
தமிழக அமைச்சரவையில் இடம் பெறும் எதிர்பார்ப்புடன் இருந்த வேலுமணி தரப்பு, அதற்கு இடமில்லாமல் போனதால், மீண்டும் எடப்பாடியை நோக்கி திரும்ப முடிவு செய்தது. இதில் சி.வி. சண்முகம் மட்டும் விதிவிலக்காக நின்றார்.
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா
இந்த பரபரப்பு ஓய்வதற்குள், அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். வேலுமணி தரப்பை சேர்ந்த மதுராந்தகம் தொகுதி மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி சத்யபாமா ஆகியோர் சபாநாயகரை சந்தித்து எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர்.
தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள்
உடனே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த 3 பேரும், தங்களை தவெகவில் இணைத்து கொண்டனர். அவர்களது ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
3 தொகுதிகள் காலி
இதையடுத்து சட்டமன்ற செயலகம் சார்பாக 3 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
4 தொகுதிகளில் இடைத்தேர்தல்
ஏற்கனவே, தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்ததால், அதற்கும் சேர்த்து 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இசக்கி சுப்பையா ராஜினாமா
இதனிடையே, அதிமுகவில் 4வது விக்கெட்டாக, அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்த அவர் டைப் செய்யப்பட்ட ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
கைப்பட ராஜினாமா கடிதம்
ஆனால், அதை ஏற்காத சபாநாயகர், கைப்பட எழுதித் தருமாறு கூற இசக்கி சுப்பியை அவ்வாறே செய்தார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் (MLA) தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில், அவர் “Speaker-க்கு addressed செய்யப்பட்ட எழுத்து மூலம்” ராஜினாமா அளிக்க வேண்டும்.
காரணம் மிகவும் முக்கியமானது:ராஜினாமா “voluntary and genuine” ஆக இருக்க வேண்டும் என்பதே சட்டத்தின் நோக்கம். யாராவது அழுத்தம் கொடுத்து, போலியாக, அல்லது உறுப்பினருக்குத் தெரியாமல் ராஜினாமா செய்துவிட்டார்கள் என்ற நிலை வரக்கூடாது என்பதற்காக இந்த மரபு பின்பற்றப்படுகிறது.
இசக்கி சுப்பையாவும் தவெகவில் இணைவார் என்று தெரிகிறது. மேலும் சில அதிமுக எம்எல்ஏக்களும் தவெக மூத்த நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேசி வருவதாக கூறப்படுகிறது. எனவே, மேலும் சிலர் தவெகவிற்கு தாவ வாய்ப்பு உள்ளது.
அதிமுக தரப்பு அவசர ஆலோசனை
அடுத்தடுத்த நிகழ்வுகள், எடப்பாடி தரப்பையும், சி.வி. சண்முகம் தரப்பையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே, கொடுக்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் 25 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் முறையிட்டு இருக்கிறது எடப்பாடி தரப்பு. மேலும் இரண்டு தரப்பினரும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
===========