தமிழக தேர்தல் நிலவரம்
AMMK Chief TTV Dhinakaran Meets Piyush Goyal To Joins NDA Alliance in Tamil Nadu : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணிகளை இறுதி செய்யும் பணியில் தமிழக அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.
தேர்தல் கூட்டணி க்ணக்குகள்
திமுக கூட்டணி அப்படியே தொடர்ந்தாலும், காங்கிரஸ் என்ன நிலைப்பாடு எடுக்க போகிறது என்பது சற்று மர்மமாகவே உள்ளது. திமுக ஆதரவு காங்கிரசார் கூட்டணியில் தொடர் பிடிவாதம் காட்டினாலும், தவெக பக்கம் செல்ல வேண்டும் என்பதே மற்றவர்கள் விருப்பமாக உள்ளது.
என்டிஏவில் அமமுக
அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக இடம்பெற்று இருக்கின்றன. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே, டிடிவி தினகரன் பொதுச் செயலாளராக இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK) மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்து இருக்கிறது.
எடப்பாடியை எதிர்த்த தினகரன்
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் தொடர்ந்து உறுதியுடன் இருந்த தினகரன், ஆரம்பம் முதலே எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து வந்தார்.
ஆயினும் கடந்த சட்டமன்ற தேர்தலில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக தோல்வியை தழுவ தினகரன் கூட்டணியில் இல்லாததே காரணம், அவரது கட்சி பிரித்த வாக்குகள் திமுகவிற்கு சாதகமாகி போனதை பாஜக முறைமுகமாக கூறி வந்தது.
23ம் தேதி அதிமுக - பாஜக கூட்டணி பொதுக்கூட்டம்
அதிமுக -பாஜக கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பேச இருக்கிறார்கள். அதற்குள் கூட்டணியை இறுதி செய்து அனைத்து தலைவர்களையும் மேடையேற்ற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக நின்றது.
கூட்டணியை இறுதி செய்யும் NDA
இதற்காக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ள கட்சிகளுடன் அதிமுகவும் பாஜகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதற்காக அனைத்து கூட்டணி தலைவர்களையும் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் ஏற்ற வேண்டும் என்ற முனைப்பில் கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தப் பணிகளை முடுக்கி விட்டு இருக்கிறார்.
ஜெ. ஆட்சி அமைய - தினகரன் பேட்டி
இதன் முதல் வெற்றியாக, தினகரன் தலைமையிலான அமமுக கட்சி என்டிஏ கூட்டணியில் இணைந்து இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்ட டிடிவி தினகரன், “ தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா அம்மா அவர்கள் ஆட்சி அமைய தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம்.
ஜெயலலிதா ஆட்சி அமைய ஓரணியில் திரள்கிறோம்; மீண்டும் நல்லாட்சி வருவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
பங்காளி சண்டை தான்
அதிமுகவில் எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டைத்தான் என்று தெரிவித்த அவர் "இன்னார் செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" என தினகரன் திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை
பழசை நினைத்துக் கொண்டு கட்சி நலனையும் தமிழக நலனையும் வீணடிக்க விரும்பவில்லை. விட்டுக் கொடுப்பவர்கள் கேட்டுப் போவதில்லை. கட்சி நலன் மற்றும் தமிழக நலனை கருத்தில்கொண்டு இந்த முடிவினை அமமுக எடுத்து இருக்கிறது” இவ்வாறு தினகரன் பேட்டியளித்தார்.
பியூஷ் கோயலுடன் தினகரன் சந்திப்பு
இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்த தினகரன் முறைப்படி என்டிஏ கூட்டணியில் இணைந்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.
தினகரனை தொடர்ந்து தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் என்டிஏ கூட்டணிக்கு வர இருக்கின்றன. இது கூட்டணிக்கு தலைமை வகிக்க்கும் அதிமுகவிற்கு மேலும் வலுச்சேர்க்கும்.
===================