Anbil Mahesh Remand Extension Puzhal Jail November 18
நீதிமன்ற காவல் நீட்டிப்பு உத்தரவு
தி.மு.க. ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷின் நீதிமன்ற காவலை, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வரும் நவம்பர் 18-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை
கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்குப் பல்வேறு அங்கீகாரங்கள் மற்றும் அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ. 400 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது புகார் எழுந்தது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அன்பில் மகேஷைக் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
காணொலி வாயிலாக ஆஜர்
ஏற்கனவே விதிக்கப்பட்ட 15 நாள் நீதிமன்றக் காவல் இன்றுடன் (06 - 11-2026 ) நிறைவடைந்ததை அடுத்து, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பாகப் புழல் சிறையிலிருந்து காணொலி வாயிலாக, காவல் துறையினரால் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அன்பில் மகேஷ் மீதான நீதிமன்றக் காவலை வரும் நவம்பர் 18-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி உத்தரவிட்டார்.
ஜாமின் மனு தீர்ப்பு தேதி
முன்னதாக, அன்பில் மகேஷிற்கு ஜாமின் வழங்கக் கோரிய மனுவின் மீதான தீர்ப்பு வரும் நவம்பர் 10-ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
=============