Anbumani condemned DMK government's claim that 30 lakh new jobs have been created, Reserve Bank exposed the lie X
தமிழ்நாடு

தொழில் வேலைகள்:திமுக சொல்வது 30 லட்சம்,உண்மை 4.29 லட்சம்:அன்புமணி

Anbumani Slams DMK Govt : 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக திமுக அரசு கூறும் தகவல் பொய் என்று, ரிசர்வ் வங்கி அம்பலப்படுத்தி இருப்பதாக, அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Kannan

பொய்கூறும் திமுக அரசு

Anbumani Slams DMK Govt : பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ‘’ தொழில் வளர்ச்சிக்காக துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக அரசு தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து விட்டதாக பொய்யுரைத்து வருவது கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகள் வந்ததாகவும், அதன் மூலம் 34 லட்சத்திற்கும் கூடுதலான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டு வந்த பொய்யை அம்பலப்படுத்தும் வகையில், திமுக அரசின் பொய் முதலீடுகள் என்ற தலைப்பிலான ஆவணத்தை நான் வெளியிட்டிருந்தேன்.

30 லட்சம் வேலைவாய்ப்புகள்?

அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாத திமுக அரசு, தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தரவுகள் தெரிவிப்பதாக விளக்கமளித்திருந்தது. அதுவும் பொய் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி கையேடு

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதார நிலை, தொழில், விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் நிலை குறித்த தரவுகளைத் தொகுத்து இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய கையேடு ( Handbook of Statistics on Indian States) என்ற ஆவணத்தை இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது, அதில் தான் திமுக அரசின் பொய்கள் தோலுரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு - தகவல்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த 2020-21-ஆம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 39,393 ஆகவும், அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 46,453 ஆக இருந்தது. அதன் பின் மூன்றாண்டுகள் கழித்து 2023-24ஆம் ஆண்டில் இறுதியில் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 40,121 ஆகவும், அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 75,675 ஆகவும் உயர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கி ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

728 தொழிற்சால்களை மட்டுமே...

அதாவது திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 3 ஆண்டுகளில் 728 தொழிற்சாலைகள் மட்டுமே புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இது வெறும் 1.85% வளர்ச்சி தான்.

தொழிலாளர்கள் 4.29 லட்சம் அதிகரிப்பு

அதேபோல், இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரின் எண்ணிக்கையும் 4.29 லட்சம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. இதில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள் மட்டுமின்றி, உள்ளூர் அளவில் சொந்த நிதியிலும், வங்கிக் கடன் மூலமாகவும் உருவாக்கப்பட்ட சிறும், குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் அடங்கும்.

திமுக அரசின் பொய் அம்பலம்

திமுக ஆட்சியில் தொழில்துறையில் வெறும் 4.29 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவழங்கப்பட்டுள்ள நிலையில், 30 லட்சம் பேருக்கும் கூடுதலாக வேலை கிடைத்திருப்பதாக திமுக அரசு கூறி வருவது எவ்வளவு அப்பட்டமான பொய் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

தொழிற்சாலைகளும் அதிகரிக்கவில்லை

அதேபோல் தமிழகத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,614 ஆக உயர்ந்து விட்டதாக திமுக அரசு கூறி வந்த நிலையில், 2023-24ஆம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தில் இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 121 மட்டும் தான் என்பதையும் ரிசர்வ் வங்கி அம்பலப்படுத்தியுள்ளது.

குறைவான முதலீடுகைளே வந்துள்ளன

தமிழ்நாட்டில் உள்ள 40,121 தொழிற்சாலைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளின் மதிப்பு ரூ.3.74 லட்சம் கோடி மட்டும் தான். அதிமுக ஆட்சியின் இறுதியில் 39,393 தொழிற்சாலைகளின் மதிப்பு ரூ.3.02 லட்சம் கோடியாக இருந்தது.

அடுத்த மூன்றாண்டுகளில் ரூ.72,770 கோடி மட்டுமே தொழிற்சாலைகளின் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக வந்த முதலீடுகள் இல்லாமல் தனியாக செய்யப்பட்ட முதலீடுகளும் அடக்கம்.

முதலீட்டு புள்ளி விவரத்திலும் பொய்

அவ்வாறு இருக்கும் போது ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்து விட்டதாகவும், 34 லட்சம் வேலைகள் வழங்கப்பட்டு விட்டதாகவும் திமுக அரசு கூறிவருவது அப்பட்டமான பொய் என்பதை உணர முடியும்.

தொழில் முதலீடுகள், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவை சார்ந்த விஷயங்களில் திமுக அரசு கூறுவதெல்லாம் பொய் தான் என்பதை ரிசர்வ் வங்கி தரவுகள் நிரூபித்துள்ளன.

மக்களை ஏமாற்றும் அரசு

கடந்த நான்கரை ஆண்டுகளாக பொய்களை மட்டுமே கூறி மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்” இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி எச்சரித்துள்ளார்.

======