காவிரி ஆணையக் கூட்டம்
Anbumani insisted Cauvery Management Commission meeting should postponed until new governments sworn in Tamil Nadu, Kerala, Puducherry : டெல்லியில் நாளை மறுநாள் ( புதன்கிழமை ) காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற இருக்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இதில் பங்கேற்க இருக்கின்றன.
தமிழகம், புதுச்சேரி, கேரளத்தில் தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி வெளியான பிறகே புதிய அரசுகள் பதவியேற்கும்.
இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவது குறித்து விவாதிப்பதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-ஆம் கூட்டம் தில்லியில் நாளை மறுநாள் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாநிலங்களில் காபந்து அரசு
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் அங்கம் வகிக்கும் 4 மாநிலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் முழு அதிகாரம் பெற்ற அரசுகள் இல்லாத சூழலில் இந்தக் கூட்டத்தை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
காவிரி பற்றி பேசினால் நல்லது
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவது குறித்து மட்டும் விவாதிக்கப்பட்டால் அதில் எந்த சிக்கலும் இல்லை.
மேகதாது அணை - கர்நாடகம் தீவிரம்
ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு குறுக்கு வழியிலாவது அனுமதி பெற்றுவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசு, இப்போதுள்ள சூழலை பயன்படுத்திக் கொண்டு மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்த முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
காபந்து அரசு என்ன முடிவெடுக்க முடியும்
மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டால், தமிழ்நாட்டின் சார்பில் எத்தகைய நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் பங்கேற்கும் நீர்வளத்துறை செயலாளருக்கு எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை.
தமிழகத்திற்கு பேராபத்து
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், இப்போதுள்ள அரசால் எந்தக் கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியாது. இத்தகைய சூழலில் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் தவறான நிலைப்பாட்டை எடுத்தால் அது தமிழ்நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு
மேகதாது அணை தொடர்பாக பரிந்துரைக்கும்படி, மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள ஆணையம் 2019-ஆம் ஆண்டில் கேட்டுக்கொண்டது.
எனினும், அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களில் விவாதிக்கக் கூடாது என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
நீதிமன்றத்தில் திமுக அரசு தொய்வு
எனவே, விரிவான திட்ட அறிக்கை பற்றி நீண்ட காலமாக விவாதிக்கப்படாமல் இருந்தது. இத்தகைய சூழலில் தான் மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து, மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை திமுக அரசு திறம்பட நடத்தாததால், மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடையில்லை என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.
மேகதாது விவாதிக்க வாய்ப்பு
அதனால், நாளை மறுநாள் நடைபெறவுள்ளக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து கர்நாடக அரசு சிக்கல் எழுப்பும் வாய்ப்புள்ளது.
எனவே, மேகதாது அணை விவகாரத்தில் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக முடிவெடுக்கப்படுவதைத் தவிர்க்க நாளை மறுநாள் தில்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் புதிய அரசுகள் பங்கேற்கும் வரை ஒத்திவைக்க வேண்டும்.
ஆணையம் உத்தரவாதம் தரவேண்டும்
ஒருவேளை கூட்டத்தை நடத்துவது தவிர்க்க முடியாதது என்றால், அதில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முன்கூட்டியே உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
========