5,000 அரசு ஊழியர்கள் ஓய்வு
Anbumani Questions DMK on Pension for Retired TN Govt Employees : தமிழகத்தில் ஜனவரி 2026ல் சுமார் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்று இருக்கிறார்கள். அவர்களுக்கான ஓய்வூதிய விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுகுறித்து கேள்வி கேட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கும் பாமக தலைவர் அன்புமணி,
ஓய்வு பெற்றவர்களுக்கு ஆணை எங்கே?
”தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அரசு அறிவித்திருந்த நிலையில், ஜனவரி மாதத்துடன் ஓய்வு பெற்ற சுமார் 5000 அரசு ஊழியர்களில், புதிய திட்டத்தின்படி ஒய்வூதியம் பெறத் தகுதியானவர்களுக்கு அதற்கான ஆணை எதுவும் வழங்கப்படவில்லை.
ஊழியர்களை ஏமாற்றும் திமுக அரசு
அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு திட்டமிட்டு ஏமாற்றி வருகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கூறி வந்தக் குற்றச்சாட்டை இது உறுதி செய்துள்ளது.
கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை
2003ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் 26 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்தாண்டுகளாகியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
அரசு ஊழியர்களுக்கு பயனில்லை
அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தனர். அப்போராட்டத்தைத் தடுக்கும் வகையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அறிவித்தது. இந்தத் திட்டம ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது என்று அப்போதே நான் தெரிவித்தேன்.
அம்பலத்திற்கு வந்த மோசடி
அரசாணையில், விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு தான் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை திட்டமிட்டு மறைத்து அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியது. அந்த மோசடி இப்போது அம்பலமாகி விட்டது.
ஜனவரியில் 5,000 பேர் ஓய்வு
2026 ஜனவரி மாதத்தின் கடைசி வேலை நாளான நேற்று 5,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர். அவர்களின் கணிசமானவர்கள் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதிடம் பெற தகுதியானவர்கள் ஆவர்.
ஓய்வு பெற்றவர்களுக்கு ஆணைகள் எங்கே?
திமுக அரசு கூறியிருந்தவாறு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், நேற்றுடன் ஓய்வு பெற்ற ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களில் தகுதியானவர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்படி பயனடைவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி ஏதும் வழங்கப்படவில்லை.
செயல்பாட்டிற்கு வந்தால் ஆணை எங்கே?
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், அதற்காக மக்களின் வரிப்பணத்தில் ஒரு விழாவையே திமுக அரசு நடத்தியிருக்கும். ஆனால், எதையும் செய்யாமல் அடக்கி வாசிப்பதில் இருந்தே தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது உறுதியாகிறது.
13,000 கோடி நிதி தேவை
திட்டத்தைக்கூட செயல்படுத்தாமல் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதிலிருந்தே அதன் மோசடித்தனத்தை அளவிட முடியும். விதிகளை வகுப்பது மிகவும் எளிது.
ஆனால், ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் சார்பில் ரூ.13,000 கோடி நிதி உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
திட்டத்தை செயல்படுத்த முடியாது
திமுக அரசிடம் நிதி இல்லை என்பதால் ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவும் முடியாது. ஆனாலும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நாடகங்களை திமுக அரசு நடத்துகிறது” என்று அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.
=============