404 வாக்குறுதிகள் நிறைவேற்றம் - முதல்வர்
Anbumani Ramadoss on DMK Election Manifesto 2021 : 2021ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின் போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள், அதாவது 80% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பொய் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்
இதுபற்றி கேள்வி எழுப்பி இருக்கும் பாமக தலைவர் அன்புமணி, வெறும் 13 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு இருப்பதாக கூறி இருக்கிறார். அந்த அறிக்கையில், “ பொன்னேரியில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்ச, 2021 தேர்தலில் 505 வாக்குறுதிகளை திமுக அளித்திருந்தது. அவற்றில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய் ஆகும்.
முதலமைச்சருக்கு இது அழகல்ல
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் நிறைவேற்றாததை நிறைவேற்றியதாக மீண்டும், மீண்டும் பொய்களை கூறுவது அவரது பதவிக்கு அழகல்ல. திமுக அளித்த வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13% வாக்குறுதிகளை மட்டும் தான் திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது.
373 வாக்குறுதிகள் அப்படியே உள்ளன
திமுக அரசால் முழுமையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகள், அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகள், நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகள் ஆகியவற்றை பட்டியலிட்டு, விடியல் எங்கே? என்ற தலைப்பிலான ஆவணத்தைத் தயாரித்து கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி சென்னையில் வெளியிட்டேன்.
80 சதவீதம் நிறைவேற்றம் எப்படி சாத்தியம்
அதன்பின் 5 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இடைப்பட்ட காலத்தில் எந்த வாக்குறுதியும் புதிதாக நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற மோசடி அறிவிப்பை மட்டும் தான் திமுக அரசு வெளியிட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் போது எப்படி 80% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கும்?
எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர்கள்!
இன்னும் எத்தனைக் காலம் தான் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும், அவரது அமைச்சர்களும் தமிழக மக்களை ஏமாற்றுவார்கள்?
விடியல் எங்கே? ஆவணம் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து, திமுகவின் 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அமைச்சர் கூற்று - மாறுபட்ட புள்ளி விவரம்
40 வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. ஆக மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. மத்திய அரசின் அனுமதிக்காக 37 வாக்குறுதிகள் காத்திருக்கின்றன. மீதமுள்ள 64 வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை என்று கூறினார்கள்.
அதே கதை, வசனமா?
அதன்பின், கடந்த 3ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் இதே தகவல்கள் வெளியிடப்பட்டன. 5 மாதங்களுக்கு முன் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்காக எழுதப்பட்ட அதே கதை வசனத்தை இப்போது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் பேசி நடித்திருக்கிறார்.
5 மாதங்களில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை
கடந்த செப்டம்பர் மாதம் எழுதப்பட்ட கதை வசனத்தில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன; 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளன என்று கூறப்பட்டிருந்தது. இப்போது எழுதப்பட்ட வசனத்திலும் அப்படியே தான் கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 5 மாதங்களில், பரிசீலனையில் இருந்த 40 வாக்குறுதிகளில் ஒன்று கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதை திமுக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது.
நிறைவேற்றாத வாக்குறுதிகள்
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு, இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் என போராட்டங்கள் நீள்கிறது.
கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை, சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படவில்லை, மாதம் ஒரு முறை மின்சாரக் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வரவில்லை, ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை, பேருந்துக் கட்டணம் குறைக்கப்படவில்லை என ஏராளமானவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
மக்களை முட்டாளாக்கக் கூடாது
ஆனால், 80% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறுவதன் மூலம் தமிழ்நாட்டு மக்களை முட்டாள்களாக்க திமுக முயல்கிறது. திமுக அரசு உண்மையாகவே வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை வெளியிட வேண்டும்.
நேருக்குநேர் விவாதிக்க தயாரா?
இப்போது மீண்டும் அறைகூவல் விடுக்கிறேன். திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அதற்கான பட்டியலை வெளியிட வேண்டும் இல்லாவிட்டால் இது குறித்து என்னுடன் நேருக்கு நேர விவாதிக்கவாவது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை ஒப்புக்கொண்டு மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்”. இவ்வாறு அன்புமணி சவால் விடுத்துள்ளார்.
================