மது விற்பனை - உச்ச நீதிமன்றம்
Anbumani Slams DMK Government on Tetra Pak : இதுபற்றி அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தில் மது வகைகளின் தரப்பெயர் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கண்ணாடி புட்டிகளிலும், காகிதக் குடுவைகளிலும் அடைக்கப்பட்ட மது வகைகளின் மாதிரிகள் நீதிபதிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டன.
உச்ச நீதிமன்ற நீதிபதி அதிர்ச்சி
மேல்சட்டைப் பைகளிலும், கால்சட்டைப் பைகளிலும் எளிதாக எடுத்துச் செல்ல வசதியாக சிறிய காகிதக் குடுவைகளில் ( டெட்ரா பேக்) விஸ்கி எனும் மது வகை அடைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூரியகாந்த் அதிர்ச்சியடைந்தார். மது வகைகள் இப்படி விற்பனை செய்யப்படுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
பழச்சாறு போல டெட்ரா பேக்கில் மது
‘‘இது மிகவும் ஆபத்தானது. இது பழச்சாறு அடைக்கப்பட்ட டெட்ரா பேக் போல காட்சியளிக்கிறது. இது குழந்தைகளின் கைகளில் கிடைத்தால் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த டெட்ரா பேக்குகளில்(Tetra Pak Liquor) போதை தரும் மது தான் இருக்கிறது என்று பெற்றோராலும், ஆசிரியர்களாலும் கூட சந்தேகிக்கக் கூட முடியாது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்” என்று நீதிபதி சூர்யகாந்த் எச்சரித்தார்.
டெட்ரா பேக்கில் மது - தமிழக அரசு
உச்ச நீதிமன்ற நீதிபதி விடுத்த இந்த எச்சரிக்கைக்கும், தமிழ்நாட்டிற்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனாலும், மது வணிகத்தில் புதுமையை புகுத்துவதாகக் கூறி கடந்த ஆண்டில் டெட்ரா பேக்குகள் எனப்படும் காகிதக் குடுவைகளில் மது விற்க முடிவு செய்திருந்தது.
அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உச்சநீதிமன்ற நீதிபதி இப்போது தெரிவித்த இதே கருத்துகளை அப்போது வெளியிட்டு எச்சரித்த நான், காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்யப்பட்டால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தேன். அதைத் தொடர்ந்து தான் அந்தத் திட்டத்தை திமுக அரசு கைவிட்டது.
பாமக கடும் எதிர்ப்பு
ஒருவேளை பாட்டாளி மக்கள் கட்சியின் எச்சரிக்கையையும் மீறி காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தியிருந்தால், உச்சநீதிமன்றத்தால் இப்போது தெரிவிக்கப்பட்டதை விட மிக மோசமான கண்டனத்திற்கு ஆளாகியிருக்க நேரிடும்.
அரசு வெட்கி தலைகுனிய வேண்டும்
எது எப்படியிருந்தாலும் வருங்காலத் தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்ய நினைத்ததற்காகவே திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.!” இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி தெரிவித்துள்ளார்.
====================