சென்னையில் எதிர்காலத்தில் வெள்ள பாதிப்பைத் தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
சென்னையில் வெள்ள பாதிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்குவதற்காக, ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு தனது இடைக்கால அறிக்கையை 2022 மே மாதத்திலும், இறுதி அறிக்கையை 2023 மார்ச் 14-ஆம் தேதியும் அரசிடம் சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
41 மாதங்களாக வெளியாகாத அறிக்கை
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, பா.ம.க. சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி, திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நீண்ட காலமாகியும் அது பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படவில்லை என கேள்வி எழுப்பினார்
இதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக புதியதாக 7 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
161 பரிந்துரைகள் என்ன?
திருப்புகழ் குழு அறிக்கையில் மொத்தம் 161 பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார். இதில் பல பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக முன்பு அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தாலும், எந்தெந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்பது தெளிவாக வெளியிடப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
அறிக்கையில் என்ன ரகசியம்?
மக்கள் வரிப்பணத்தில் பல்வேறு கள ஆய்வுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடாமல் இருப்பதன் காரணம் என்ன என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்
தவெக அரசு தயங்க கூடாது
மேலும், திமுக அரசு இந்த அறிக்கையை வெளியிடாமல் இருந்ததற்கான காரணங்கள் இருக்கலாம் என்றும், ஆனால் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாக அறிவித்துள்ள தற்போதைய தவெக அரசுக்கு அந்த அறிக்கையை வெளியிடுவதில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தாமதிக்காமல் திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு, அதில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், மீண்டும் சென்னை வெள்ள பாதிப்பை சந்திக்கக் கூடாது என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
================