பாமக கட்சி விரிசல்
Anbumani Ramadoss on DMK Government : பாமக கட்சியில் சமீப காலமாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கும் கட்சிக்குள்ளேயே கடும் போர் நிலவி வருகிறது. இதனால், பாமக கட்சி தொண்டர்கள் கடும் விரக்தியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், அவ்வப்போது இருவரும் தங்களுக்குள் விமர்சனம் செய்து கட்சிக்குள் பல்வேறு சூட்சமங்களை நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து திமுக குறித்து விமர்சித்து வரும் அன்புமணி, தற்போது மழையால் ஏற்பட்ட நெற்பயிர் இழப்பிற்கு அரசு உரிய இழப்பீடு வழங்கி சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகளை பேசி வருகிறார்.
அன்புமணி செய்தியாளர் சந்திப்பு
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, "கனமழையால் சுமார் 2.5 ஆயிரம் ஏக்கர் தண்ணீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பருவ மழை முன்பு மழைநீர் வெளியேற அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் டெல்டா மாவட்டங்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. டெல்டாவில் சுமார் 6.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்துள்ளார்கள். அதனடிப்படையில் 18 லட்சம் டன் கொள்முதல் செய்திருக்க வேண்டும். ஆனால் 5 லட்சம் தான் கொள்முதல் செய்துள்ளார்கள். திமுக அரசு எதையும் செய்யவில்லை. ஈரப்பதம் அதிகமாக இருப்பதினால் கொள்முதல் செய்யவில்லை. பெரியார், கருணாநிதி பெயரை பயன்படுத்த ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்று விமர்சித்தார்.
ஸ்டாலின் கணக்கெடுப்பு எடுக்காதது ஏன்
சாதிவாரி கணக்கெடுப்பு தேர்தலில் வாக்குக் காசு கொடுக்க கணக்கெடுப்பு நடத்தும் நீங்கள் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கவில்லை. மக்கள் தொகை கணக்கு கேட்கவில்லை, சாதிவாரி கணக்கெடுப்பு தான் கேட்கிறோம். கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் சமூகநீதி பேசும் தலைவர்கள் ஏன் இதை பற்றி கேட்கவில்லை. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், ஸ்டாலின் ஏன் கணக்கெடுப்பு எடுக்காமல் இருக்கிறார். திமுக கூட்டணி கட்சிகள் இதில் ஏன் அமைதி காக்கிறார்கள். கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் பட்டியலின மக்கள் அதிகம் பயன்பெறுவர்கள். வைகோ, திருமாவளவன், ஏன் அமைதியாக இருக்கிறார்கள். கூட்டணிக்காகவா அல்லது சீட்டுகாகவா. ஏன் பயப்படுகிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் சமூக நீதி நிலைநாட்ட முடியும். வேளாண் அமைச்சர், உணவு துறை அமைச்சர் சொல்வதை ஏற்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தினசரி கனிமவளம் திருடப்படுகிறது
விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோவமாக உள்ளார்கள். கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தி சென்று ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. அரசு அதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். தென் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளி தான் இதற்கு காரணம். தமிழ்நாட்டிற்கு தினசரி ஆயிரம் லாரிகளில் கோடிக்கணக்கான கனிம வளங்கள் திருடப்படுகின்றன. இதைக் கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளோம்.
திமுக- அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் தான் கேள்வி
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆறுகள் மறு சீரமைப்பு செய்வோம் என்றனர். கடந்த 4.5 வருடங்களில் நீர் மேலாண்மைக்காக ஒரு திட்டத்தை கூட ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. அத்திக்கடவு அவிநாசி திட்டம் தோல்வியடைந்துவிட்டது. இதில் அதிமுக, திமுக இரண்டு காட்சிகளை தான் குறிப்பிட்டு சொல்கிறேன். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீரை கொண்டு வர வேண்டும். கடலில் சென்று வீணாவதைத் தடுக்க வேண்டும்.
மேலும் படிக்க : பாமக செயல் தலைவரானார் ஸ்ரீகாந்தி : அன்புமணியை ஓரங்கட்டிய ராமதாஸ்
வசனம் பேசினால் மட்டும் சாதி ஒழியாது
திரைப்படங்கள் சாதியை பற்றி பேசினால் மட்டும் போதாது. சினிமா பார்த்தால் சாதி ஒழிக்க முடியுமா. வசனம் பேசினால் சாதி ஒழியுமா. அடிப்படை மாற்ற வேண்டும். கல்வி, வேலை கொடுக்க வேண்டும். இதற்கு தான் சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கிறோம்.நெல் கொள்முதல் செய்ய திமுக அரசுக்கு துப்பு இல்லை. டெல்டா மாவட்டங்களில் நெல் சேகரிக்க அடிப்படை கட்டுமானம் ஏன் உருவாக்கவில்லை. லட்சக் கணக்கில் சேகரிக்கும் குடோன் ஏன் கட்டப்படவில்லை. விவசாயிகள் பாவம். எனக்கும் அப்பாவுக்கும் இருப்பது உட்கட்சி விவகாரம். அதைப்பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார்.