விவசாயிகள் நலன் காப்பதில் தோல்வி
Anbumani Ramadoss on Paddy Procurement : இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பாண்டில் வரலாறு காணாத அளவில் இந்த முறை நெல் விளைச்சல் கிடைத்துள்ள நிலையில், தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற தன்மையால், அதன் பயன்கள் உழவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ? என்ற ஐயமும், அச்சமும் எழுந்துள்ளது. நெல் கொள்முதல் விவகாரத்தில் உழவர்களின் நலன்களைக் காப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது.
விளைச்சல் அமோகம் - ஆனால் விவசாயிகள்?
நடப்பாண்டில் குறுவை சாகுபடி முன்கூட்டியே தொடங்கப்பட்டதாலும், நெல்லை நேரடியாக தெளிப்பு முறையில் விதைப்பது உள்ளிட்ட புதிய முறைகளை கடைபிடித்ததாலும் அதிக விளைச்சல் கிடைத்திருக்கிறது. ஏக்கருக்கு சராசரியாக 25 குவிண்டால் நெல் விளைச்சல் கிடைத்திருப்பதால் உழவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். ஆனால், நெல்லை விற்று பணமாக்குவதற்குள் ஏராளமான தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் அவர்களின் மகிழ்ச்சி கலக்கமாக மாறி வருகிறது.
குறைவாகவே நெல் கொள்முதல்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மிகக்குறைந்த அளவிலேயே நெல் கொள்முதல் செய்யப்படுவதாலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கோ, அரவை ஆலைகளுக்கோ கொண்டு செல்லப்படாமல் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கிக் கிடப்பதாலும், பல கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை வாங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அவலத்தை கடந்த 7-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நான் சுட்டிக்காட்டி , நிலைமையை சீரமைக்கும்படி வலியுறுத்தியிருந்தாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்
நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான குவிண்டால் நெல்லை குவித்து வைத்துக் கொண்டு கொள்முதலுக்காக உழவர்கள் காத்திருந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையில் அவை நனைந்து வீணாகிவிட்டன. வயல்களில் புதிதாக அறுவடை செய்யப்படும் நெல்லும் ஈரப்பதம் நிறைந்ததாகவே உள்ளது. நனைந்த நெல்களின் ஈரப்பதம் 25% வரை இருப்பதாக உழவர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்க
மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின்படி 17% ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். ஆனால், இப்போது மழையில் நனைந்த நெல்களின் ஈரப்பதம் 23 முதல் 25% வரை உள்ளது. இவ்வளவு ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழக அரசு தன்னிச்சையாக கொள்முதல் செய்ய முடியாது. மத்திய அரசு அனுமதி அளித்தால் மட்டும் தான் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய முடியும்.
தமிழக அரசு மெத்தனம்
எனவே, 25% வரை ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் பேசி அனுமதி வாங்கும்படி உழவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கான எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் நனைத்து ஈரப்பதம் அதிகரித்ததற்கு தமிழக அரசு தான் காரணம் .
25% ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்க
அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று 10 நாள்களுக்கும் மேலாக உழவர்கள் காத்திருந்தும் கூட, உரிய காலத்தில் அவற்றை கொள்முதல் செய்யாததால் திடீர் மழையில் நனைந்து நெல் ஈரப்பதம் நிறைந்ததாக மாறிவிட்டது. எந்த நேரம் வேண்டுமானாலும் மழை பெய்யும் சூழல் இருப்பதால் அவற்றை காய வைப்பது சாத்தியமில்லை எனவே, உழவர்களைக் காப்பாற்ற ஒரே வழி மத்திய அரசுடன் பேச்சு நடத்தி, 25% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி பெறுவது தான்.
மேலும் படிக்க : விளம்பரத்தை முதலீடாக கொண்ட திமுக ஆட்சி : கடுமையாக சாடும் அன்புமணி
தமிழக அரசுக்கு அக்கறையில்லை
நடப்பாண்டிலும் இப்போது மத்திய அரசிடம் விண்ணப்பித்து 25% வரை ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய முடியும். ஆனால், அதற்கான எந்த முன்னெடுப்பும் தமிழக அரசால் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. உழவர்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லாதது தான் இதற்குக் காரணம் ஆகும்.
கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்
நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்கள் எதிர்கொள்ளும் இன்னொரு பெரும் சிக்கல் நெல்லை கொள்முதல் செய்வதற்காக கட்டாயப்படுத்தி வசூலிக்கப்படும் கையூட்டு தான்.நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் ரூ.60 வீதம் கையூட்டு வாங்கும் பணியாளர்கள், மூட்டைக்கு 2 கிலோ நெல்லை குறைத்து கணக்கு காட்டுகின்றனர். அதனால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.150 வீதம் கையூட்டு, ரூ.125 மதிப்புள்ள 5 கிலோ நெல் என ரூ.275 வரை கையூட்டு வழங்க வேண்டியுள்ளது. அதன்படி பார்த்தால் ஓர் உழவர் ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்லை விற்க ரூ.6875 கையூட்டாக வழங்க வேண்டும். இவ்வளது அதிக தொகையை கையூட்டாக வழங்கினால் உழவர்களுக்கு ஒரு லாபமும் கிடைக்காது.
வெட்டி அரசியலை கைவிட வேண்டும்
இன்னும் 6 நாள்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் , போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால், உழவர்கள் கண்ணீர் சிந்துவதை தடுக்க முடியாது. எனவே, தமிழக அரசு இன்னும் வெட்டி அரசியலும், விளம்பர அரசியலும் செய்வதை விடுத்து நெல்லுக்கான ஈரப்பத வரம்பை அதிகரிக்கவும், கொள்முதல் நிலையங்களில் குவிந்திருக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
============