Anbumani said liquor sales in Tamil Nadu reached Rs. 217 crore on the day of Bhogi, Rs. 301 crore on Pongal day 
தமிழ்நாடு

பொங்கல் நாளில் 518 கோடிக்கு மது விற்பனை:திமுகவின் சாதனை! அன்புமணி

போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் தமிழகத்தில் மது விற்பனை ஆகியுள்ளதாக அன்புமணி தெரிவித்து உள்ளார்.

Kannan

மக்கள் நலனில் அக்கறையில்லை

இதுபற்றி பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டில் பொங்கல், போகிப் பண்டிகை ஆகிய இரு நாள்களில், டாஸ்மாக் வாயிலாக மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மது வணிகமே குறிக்கோள்

மக்கள் நலனுக்காக துரும்பைக் கூட அசைக்காத திமுக அரசு, ஆண்டுக்கு ஆண்டு மக்களை மேலும், மேலும் குடிகாரர்களாக்கி மது வணிகத்தைப் பெருக்குவதில் மட்டும் தான் வெற்றி பெற்றிருக்கிறது. இது சாதனை அல்ல வேதனை.

ரூ.518 கோடிக்கு மது விற்பனை

போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகி இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வளர்ச்சியில் மது வணிகம்

கடந்த ஆண்டில் ரூ.454 கோடிக்கு மது விற்பனையாகிருந்த நிலையில், நடப்பாண்டில் அதை விட 14.10% அதிகம் ஆகும். தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் 11.19% அளவுக்கு வளர்ச்சியடைந்த நிலையில், அதை விட அதிகமாக மது வணிகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. மக்களுக்கு மதுவைப் புகட்டுவதில் மட்டும் தான் திமுக அரசு சாதனை படைக்கிறது.

மது விற்பனை ரூ.900 கோடியை எட்டும்?

கடந்த ஆண்டு பொங்கல் திருநாளின் போது போது 4 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில், நடப்பாண்டில் நாளை வரையிலான 4 நாள்களில் மது வணிகம் ரூ.900 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.

மதுக்கடைகளில் பொங்கல் பரிசுப்பணம்

இவற்றையெல்லாம் பார்க்கும் போது பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் பரிசாக மக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.6 ஆயிரம் கோடியையும் இந்த மாதத்திலேயே திரும்பவும் வசூலித்து விட இலக்கு நிர்ணயித்து திமுக அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தான் எழுகிறது.

மனமகிழ் மன்றங்களில் கூடுதல் விற்பனை

பொங்கல் திருநாள் மது வணிகத்தில் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், மனமகிழ் மன்றங்களின் மூலம் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது என்பது தான்.

இது மதுக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட ரூ.435.41 கோடி மதுவுடன் ஒப்பிடும் போது 19% ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் 500 மதுக்கடைகளை, அதாவது 9% மதுக்கடைகளை மூடிய திமுக அரசு, 19% கூடுதலாக மது வணிகம் செய்யும் அளவுக்கு மனமகிழ் மன்றங்களைத் திறந்து மதுவை விற்பனை செய்திருப்பது உறுதியாகியிருக்கிறது.

மதுவிலக்கை நோக்கி அரசு பயணிக்கவில்லை

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எந்த நிலையிலும் மதுவிலக்கை நோக்கி பயணிக்கவில்லை, மதுப் பெருக்கத்தை நோக்கித் தான் பயணிக்கிறது என்பதற்கு இதைத் தவிர வேறு சான்றுகள் தேவையில்லை.

மக்கள்விரோத மது ஆதரவு அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்”. இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி தெரிவித்து கொண்டுள்ளார்.

====================