மேட்டூர் அணை திறப்பு இல்லை
மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், குறுவை சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
கர்நாடகாவில் பருவமழை தீவிரம் அடைந்து, அங்குள்ள அணைகள் நிரம்பினால் மட்டுமே, காவிரியில் தண்ணீர் பெருக்கெடுக்க வாய்ப்பு உள்ளது.
குறுவை சாகுபடி பாதிப்பு
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் 2024-ஆம் ஆண்டைத் தவிர மீதமுள்ள அனைத்து ஆண்டுகளிலும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டது.
மேட்டூரில் 41 டிஎம்சி தண்ணீர்
நடப்பாண்டில் குறுவை சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பு அணையின் மொத்தக் கொள்ளளவான 93.47 டி.எம்.சியில் பாதிக்கும் குறைவாக 41.64 டி.எம்.சி மட்டுமே இருப்பதால் மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்படவில்லை.
தாமதமாகும் பருவமழை
ஜூன் 4ம் தேதி கேரளத்திலும் பெய்யத் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தொடர்ந்து முன்னேறாமல் முடங்கி விட்டது. அடுத்த இரு வாரங்களுக்கு தென் மேற்கு பருவமழை கேரளம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்வதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.
கர்நாடகா தண்ணீர் தராது
இதையெல்லாம் கணக்கிட்டு பார்த்தால் ஆகஸ்ட் மாத பின்பகுதிக்கு முன்பாக கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பி, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு இல்லை.
கருகும் நெற்பயிர்கள்
கடந்த சில வாரங்களாக தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. இந்த நெருக்கடியான சூழலில் இருந்து உழவர்களைக் காப்பாற்றுவதற்காக, காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.
தடையற்ற மும்முனை மின்சாரம்
இவை அனைத்துக்கும் மேலாக குறைந்தது 3 லட்சம் முதல் 4 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய தடையற்ற மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளின் வாயிலாக காவிரி பாசன மாவட்டங்களில் குறைந்தபட்ச அளவிலாவது குறுவை நெல் சாகுபடி செய்யப்படுவதையும், உழவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என” அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
====================