மின்துறையில் எங்கும் ஊழல்
மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதில் மட்டுமின்றி, ஒரு யூனிட்டுக்கு ரூ.20 வரை விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்தது, வீடுகளுக்கு பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீட்டருக்கு சந்தை விலையை விட 350% அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ய பேரம் பேசி முடித்திருப்பது என திமுக ஆட்சியில் ஊழலின் விளைநிலமாக மின்சாரத் துறை திகழ்ந்து வருவதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அன்புமணி அறிக்கை
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கூடுதல் விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டதில் வாரியத்திற்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
விசாரணையை தடுக்க திமுக மும்முரம்
இந்த ஊழலின் விசாரணையை திமுக அரசும், காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவும் திட்டமிட்டு தடுத்து வந்த நிலையில், உயர்நீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
திமுக அரசின் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அறப்போர் இயக்கம் வழக்கு
இதே குற்றச்சாட்டு குறித்து உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் அறப்போர் இயக்கம் 2023ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி புகார் அளித்தது.
அதிமுக தொடர்ந்த வழக்கு
ஆனால், நடவடிக்கை இல்லாததால் அறப்போர் இயக்கமும், அதிமுகவும் தொடர்ந்த வழக்குகளில் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி
மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்தும் விசாரணை நடத்த நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது திமுகவின் ஊழல்களுக்கு எதிராக பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் நடத்தி வரும் போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் மிக முக்கிய வெற்றியாகும்.
கூடுதல் விலைக்கு வாங்கிய அரசு
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை மின்சார வாரியத்திற்கு 45,800 மின்மாற்றிகள் ரூ.1182 கோடிக்கு வாங்கப்பட்டன. சந்தை விலையை விட 37% கூடுதலாக விலை கொடுத்து மின்மாற்றிகள் வாங்கப்பட்டுள்ளன.
அதாவது ஆட்சியாளர்களின் ஆசி பெற்ற ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டு சந்தை விலையை விட 50% கூடுதலாக விலையை குறிப்பிட்டுள்ளனர். அதன்பின் மின்வாரியம் கேட்டுக் கொண்டதற்கிணங்க சிறிதளவு விலையை குறைத்துள்ளனர். இவை அனைத்தும் திட்டமிட்டு திரைக்கதை எழுதி நடத்தப்பட்ட நாடகம்.
ஊழல் நடந்தது அம்பலம்
ஒப்பந்ததாரர்கள் கட்டுபடியாகும் விலையை குறிப்பிடவில்லை என்றால், அந்த நடைமுறையை ரத்து செய்து விட்டு, புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் அவர்களுடன் அரசு பேச்சு நடத்தி, அதிக விலை கொடுத்து மின்மாற்றிகளை கொள்முதல் செய்ததிலிருந்தே இதில் ஊழல் நடந்திருப்பது உறுதியாகிறது.
செந்தில் பாலாஜி காரணம்
மின்மாற்றி கொள்முதலில் ஏற்பட்ட இழப்புக்குக் காரணம் அப்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லகானி மற்றும் அதிகாரிகள் தான் காரணம் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
ஆனாலும் அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு, இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட வெகுமதிகளை வழங்கி வந்தது.
ஊழலின் விளைநிலம்
மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதில் மட்டுமின்றி, ஒரு யூனிட்டுக்கு ரூ.20 வரை விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்தது, வீடுகளுக்கு பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீட்டருக்கு சந்தை விலையை விட 350% அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ய பேரம் பேசி முடித்திருப்பது என திமுக ஆட்சியில் ஊழலின் விளைநிலமாக மின்சாரத் துறை திகழ்ந்து வருகிறது.
ஊழலில் திமுக ஆட்சி
திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே, திமுக சட்டத்தின்படியும் அதன் ஊழல்களுக்காக தண்டிக்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை,’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
=================