தமிழக தேர்தல் களம்
Pawan Kalyan About TVK Alliance with NDA in Tamil Nadu : தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத பரபரப்பை எட்டி இருக்கிறது. தவெக தலைவர் விஜய்க்கு கிடைக்கும் ஆதரவு, கூடும் மக்கள் கூட்டம், திமுக, அதிமுகவை அசைத்து பார்த்து இருக்கிறது. எனவே, 2026 சட்டமன்ற தேர்தல் வித்தியாசமாகவே இருக்கும் என்பது தெரிகிறது.
26 கட்சிகளுடன் திமுக கூட்டணி
26 கட்சிகளுடன் திமுக மெகா கூட்டணி அமைத்து, ஆட்சியை மீண்டும் பிடிக்கும் முனைப்புடன் களமாடி வருகிறது. காங்கிரஸ் கட்சி எப்படியும் தவெகவுடன் சென்று விடும் என்று அனைவரும் கணித்த நிலையில், மூன்று தோகுதிகளை கூடுதலாக கொடுத்து, ஒரு ராஜ்யசபா சீட்டோடு தனது சாணக்கியத்தனத்தை ஸ்டாலின் காட்டி விட்டார்.
ஒரு பக்கம் தேமுதிக, மறுபக்கம் ஓபிஎஸ் வருகை திமுகவுக்கு பலத்தை கூட்டி இருக்கிறது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்படியே இருக்க, புதிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு புதிய தெம்பை கொடுத்து இருக்கின்றன.
அதிமுக கூட்டணி
அதிமுகவும் முதலில் பாஜகவுடன் கூட்டணியை தொடங்கி, பாமக அன்புமணியை தன் பக்கம் இழுத்து விட்டது. ஏற்கனவே, என்டிஏ கூட்டணியில் இருந்தவர்களும் அதிமுக கூட்டணிக்கு வலுச் சேர்க்கின்றனர்.
எடப்பாடியை கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரனும், கூட்டணிக்குள் வந்து, தனது ஆதரவாளர்களுக்கு சீட் கொடுத்தால் போதும், தான் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று எல்லா பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இதனால், அதிமுகவும் வலிமையாகவே சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது.
தனித்து நிற்கும் தவெக
தவெக பக்கம் பல்வேறு கட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் இன்றி தனித்து விடப்பட்டு இருக்கிறார் விஜய். விஜய் பங்கேற்கும் கூட்டம், அவர் செல்லும் வழியெல்லாம் கூட்டம் அலைமோதினாலும், தேர்தல் களத்தில் வேலை பார்ப்பது என்பது வேறுதான்.
ஒவ்வொரு பூத்திலும், தெருவிலும் தொண்டர்கள் இறங்கி வேலை செய்தால், வாக்கு என்ற அறுவடை முழுமையாக கிடைக்கும். இதில் திமுகவும், அதிமுகவும் கில்லாடிகள். முந்தைய தேர்தல் அனுபவங்கள் அவர்களுக்கு கைகொடுத்து விடும்.
கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சி
இந்தச் சூழலில், அவரை எப்படியாவது என்டிஏ கூட்டணிக்கு கொண்டு வர பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக விஜயுடன் ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
விஜயுடன் பவன் கல்யாண் பேச்சு!
ஆந்திராவில் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்ததால் தனக்கு கிடைத்த நன்மைகளை, சாணக்கியத்தனத்துடன் செயல்பட்ட விதம் குறித்து அவர் விஜயிடம் விளக்கி இருக்கிறார்.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில் எதிர்த்து நிற்கும் கட்சிகள் ஒன்று சேரலாம் தவறில்லை என்று பவன் கல்யாண் அட்வைஸ் செய்திருக்கிறாராம்.
தனது அண்ணன் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி, திருப்பதியில் பிரமாண்ட மாநாட்டை நடத்தி காட்டினாலும், தேர்தல் அரசியலில் தோற்று போனதை பவன் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
அரசியலில் வெற்றி முக்கியம்
அரசியலில் அடிப்படையான சாணக்கியத்தனம் இல்லா விட்டால், வெற்றி பெற முடியாது. தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் தான், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், 23 சட்டமன்ற உறுப்பினர்களையும் ஜனசேனா பெற்று இருக்கிறது.
தேர்தலில் அங்கீகாரம் தேவை
எனவே விஜயும் தனியாக நிற்பதாக சொல்லிக் கொண்டு ஏமாறாமல், என்டிஏவில் இணைந்து அரசியலில் தனக்குரிய இடத்தை, தேர்தல் வெற்றியை பெற வேண்டும் என்று பவன் கல்யாண் அறிவுறுத்தி இருக்கிறாராம்.
தெளிவான அரசியல் பார்வை
ரசிகர்களின் உற்சாகமான ஆதரவை முழுமையாக நம்பி களமிறங்குவதை விட, தமிழக அரசியலின் ஆழமான பார்வை மிகவும் அவசியம். ஒருவேளை தோற்றால், அதுவே எதிர்கால அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்” என்று பவன் கல்யாண் அட்வைஸ் கொடுத்து இருக்கிறாராம்.
தெளிவாக முடிவு எடுக்க வேண்டியது விஜய் தான் என்கிறார்கள். ஜனநாயகன் பட பிரசினை, கரூர் பிரச்னை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர் முன்னெடுக்கக் கூடிய வாய்ப்புகள் எதிர்காலத்தை பிரகாசமாக்கலாம்.
விஜய்க்கு துணை முதல்வர் பதவி?
அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமானால், விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம். தேர்தலுக்கு சில வாரங்களே உள்ளன. முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் இருக்கிறார்.
காலம் மாறும் காட்சிகளும் மாறலாம்
தற்போது கூட்டணி அமைத்து வெற்றி பெறுவதன் மூலம், 2029 மக்களவை தேர்தல், 2013 சட்டமன்ற தேர்தல்களில் விஜய்க்கு பிரகாசமான வாய்ப்புகள் காத்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
===================