Anna University Rule 2026 New Absolute Grading System For Engineering Colleges From Next Academic Year 2026 - 2027 Source : Anna University
தமிழ்நாடு

அண்ணா பல்கலைகழக மதிப்பீட்டு முறையில் புதிய விதிமுறை : வந்தது அப்சல்யூட் கிரேடிங்!

Anna University New Absolute Grading System : அப்சல்யூட் கிரேடிங் எனப்படும் நேரடி மதிப்பெண் மதிப்பீட்டு முறையை அண்ணா பல்கலைகழகம் மீண்டும் நடைமுறை படுத்தவுள்ளது.

Baala Murugan

அண்ணா பல்கலைகழகத்தின் புதிய முடிவு

Anna University New Absolute Grading System : தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களின் தனிப்பட்ட திறனைச் சரியாக மதிப்பீடு செய்யவும் அண்ணா பல்கலைக்கழகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

'அப்சல்யூட் கிரேடிங்'

இதன்படி, வரும் 2026-27 கல்வியாண்டு முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் 'அப்சல்யூட் கிரேடிங்' எனப்படும் நேரடி மதிப்பெண் மதிப்பீட்டு முறை மீண்டும் நடைமுறைக்கு வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மதிப்பீட்டில் குளறுபடி

அண்ணா பல்கலைகழகத்தில், தற்போது நடைமுறையில் உள்ள 'ரிலேட்டிவ் கிரேடிங்' முறையில், ஒரு மாணவர் பெறும் கிரேடு என்பது அந்தத் தேர்வை எழுதிய மற்ற மாணவர்களின் சராசரி செயல்திறனைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

இதனால், கடினமாக உழைத்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் கூட, ஒட்டுமொத்த சராசரி உயரும்போது தகுந்த கிரேடுகளைப் பெற முடிவதில்லை என்ற குறைபாடு நீடித்து வந்தது.

குறிப்பாக, 91 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவர், சக மாணவர்கள் 95-க்கும் மேல் மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில் 'A+' கிரேடை இழக்க நேரிடும் சூழல் இருந்தது.

இந்த முரண்பாடுகளைக் களைய, அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் புதிய முடிவை எடுத்துள்ளது.

பல்கலைகழக பதிவாளர் சுற்றறிக்கை

புதிய 'ரெகுலேஷன் 2025'-ன் படி, தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு இந்த நேரடி மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்படும்.

மேலும், 2026-27 கல்வியாண்டில் சேரும் தன்னாட்சி கல்லூரிகளின் மாணவர்களும் இந்த முறையையே பின்பற்ற வேண்டும் எனப் பல்கலைக்கழகப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

91-100 மதிப்பெண் “எஸ் கிரேடு”

புதிய விதிமுறைகளின்படி, மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப நிலையான கிரேடுகள் வழங்கப்படும். உதாரணமாக, 91 முதல் 100 மதிப்பெண்கள் வரை எடுக்கும் மாணவர்களுக்கு 'S' கிரேடு வழங்கப்படும்.

இது அந்த மாணவரின் தனித்துவமான சிந்தனை மற்றும் ஆழமான கற்றல் திறனைக் குறிக்கும் என்று தெரியவருகிறது.

மாணவர்களின் உழைப்பிற்கு அங்கீகாரம்

அதேபோல், 56 முதல் 60 மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு 'C+' கிரேடும், 50 முதல் 55 மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு 'C' கிரேடும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பழைய முறையில் 50 முதல் 60 வரை ஒரே பிரிவாக இருந்த நிலையில், தற்போது அதில் கூடுதல் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வரவேற்பு

இந்த மாற்றத்தை வரவேற்றுள்ள கல்வி அதிகாரிகள், நுழைவுத் தேர்வில் 200-க்கு 200 கட்-ஆஃப் எடுத்த மாணவரும், 100 கட்-ஆஃப் எடுத்த மாணவரும் ஒரே தேர்வினை எழுதும்போது, அவர்களின் உண்மையான திறனை இந்த நேரடி மதிப்பீட்டு முறையே துல்லியமாகப் பிரதிபலிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில், இந்த முறையால் அதிக கிரேடுகள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைய வாய்ப்புள்ளதாகச் சில கல்லூரி முதல்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், மாணவர்களின் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்க இந்த மாற்றம் வழிவகை செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.