Anna University student sexually harassed by professor: Annamalai condemns; Urgent action should be taken google
தமிழ்நாடு

அண்ணா பல்கலை. மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை : அண்ணாமலை கண்டனம் ; விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல்தொல்லை கொடுத்ததாக,பேராசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Rohini

அண்ணா பல்கலை மாணவி புகார் வழக்கு ;அண்ணாமலை கண்டனம்

Annamalai condemns Anna University Girl Student Issue : இது தொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பேராசிரியர் மீது வந்துள்ள குற்றச்சாட்டு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிய கல்வி நிறுவனங்களிலேயே, தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நடப்பது துரதிருஷ்டவசமானது மற்றும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

சுமார் இரண்டு ஆண்டுகளாக, பேராசிரியர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாக, மாணவி புகார் கூறியிருக்கிறார். மேலும் பல மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பாதுகாப்பான முறையில், அவரது பாடப்பிரிவு மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தி, உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு, தமிழக காவல்துறைக்கு உள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மாணவியின் கோரிக்கையை ஏற்று, அவரது வகுப்பு மாணவியர் அனைவரிடமும், ரகசியமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அனைத்து மாணவிகளுக்கும், பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பேராசிரியர் குற்றம் செய்துள்ளது நிரூபிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளான போது, உயர்கல்வித்துறை அமைச்சர், அனைத்து பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினார். ஆனால், அதே காலகட்டத்தில், மேலும் பல மாணவிகள், பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள, 'பாலியல் தொல்லை தடுப்பு மற்றும் புகார் விசாரணைக் குழு' (PoSH) உண்மையில் செயல்பாட்டில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

இரண்டு ஆண்டுகளாக ஒரு மாணவி பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார். மேலும் பல மாணவிகள், பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று புகார் எழுந்துள்ளது. இவற்றைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்தக் குழு என்ன செய்து கொண்டிருக்கிறது? தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கோவி.செழியன் பொதுமக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்.

எச்சரிக்கை கலந்த வேண்டுகோள்

கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கில் காவல்துறை செய்த தவறுகளை, மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை கலந்த வேண்டுகோளை, தமிழக காவல்துறைக்கு வைத்துக் கொள்கிறேன்.

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்

கல்வி கற்க வரும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசு மற்றும் கல்வி நிலைய நிர்வாகங்களின் கடமை. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

பாலியல் சீண்டலுக்கு உள்ளானவர், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் மாணவிகள் தயங்காமல் முன்வந்து புகார் அளிக்க வேண்டும். உங்கள் துணிச்சலே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும்.