Annamalai accused Minister Ma. Subramanian blatantly lying by saying that there is no cannabis traffic anywhere in Tamil Nadu 
தமிழ்நாடு

தமிழகத்தில் எங்கேயும் கஞ்சா இல்லையா? : அமைச்சரை துளைத்த அண்ணாமலைl

தமிழகத்தில் எங்கேயும் கஞ்சா நடமாட்டமே இல்லை என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூசாமல் பொய் சொல்வதாக அண்ணாமலை சாடி உள்ளார்.

Kannan

அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு

தமிழகத்தில் எங்கேயுமே கஞ்சா நடமாட்டமே இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியிருந்த நிலையில், அமைச்சருக்க்கு கூச்சமே கிடையாதா? இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை கேள்வி

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ''தமிழகத்தில் எங்கேயுமே கஞ்சா நடமாட்டமே இல்லை என்று கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் பேசியிருக்கிறார் திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன்.வடமாநில இளைஞர் வெட்டப்பட்ட சம்பவம் பொய் என்கிறாரா அமைச்சர்.

அமைச்சருக்கு உண்மை தெரியவில்லை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் நடைபயிற்சி ஷூட்டிங்கிற்கான ஏற்பாட்டிலேயே தனது முழு நேரத்தையும் செலவிடுவதால், அமைச்சருக்கு உண்மை நிலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திருத்தணியில், 17 வயது சிறுவர்கள், கஞ்சா போதையில் ஒரு வடமாநில இளைஞரை அரிவாளால் கடுமையாக வெட்டிய காணொளியை, அமைச்சர் பொய் என்கிறாரா?

கஞ்சா விற்பனை, வழக்குகள் பதிவு

தமிழகத்தின் பல பகுதிகளில் கஞ்சா விற்பனை, கடத்தல் மற்றும் வைத்திருப்பு தொடர்பான வழக்குகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.

இந்த ஆண்டில் மட்டுமே, தூத்துக்குடியில் திமுக கவுன்சிலரின் மகன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம், சென்னை, ஆவடி பகுதியில் ஆயிரக்கணக்கான கிலோ கஞ்சா பறிமுதல்.

ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் வழக்குகளில் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளது, கஞ்சா விற்பனை வழக்குகளில் சிறை தண்டனை விதித்து நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது என, இவை அனைத்தும் நாம் நாள்தோறும் படிக்கும் செய்திகள்.

மாணவர் விடுதிகளில் கஞ்சா

கோவையில் கல்லூரி மாணவர் விடுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாணவர் விடுதிகள் வரை கஞ்சா விற்பனை ஊடுருவியிருப்பது, போதைப்பொருள் எவ்வளவு ஆழமாக தமிழகத்தில் பரவியுள்ளது என்பதற்கான நேரடி சாட்சி.

கல்வி வளாகங்களில் பாதுகாப்பு இல்லை

கல்வி வளாகங்களே பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்போது, கஞ்சா புழக்கம் இல்லை என்று பேசுவது பொதுமக்களுக்குச் செய்யும் துரோகம். கஞ்சா விற்பனை மற்றும் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்த திமுக அரசு, இன்று உண்மையை மறைத்து தப்பிக்க முயல்கிறது.

அமைச்சரின் செயல் வெட்கக்கேடு

போதைப்பொருள் சட்ட ஒழுங்கு பிரச்சினை மட்டும் அல்ல. அது தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் சமூகப் பேரழிவு. கஞ்சா கடத்துபவர்கள் மீதும் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் முயற்சிப்பது வெட்கக்கேடு'' என்று அந்த அறிக்கையில் அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.

=====