Annamalai alleged that employment growth in Tamil Nadu has remained stagnant for four years 
தமிழ்நாடு

துபாய் முதலீடு என்னாச்சு? : திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் வேலை வாய்ப்பு வளர்ச்சி அப்படியே இருப்பதாக, அண்ணாமலை குற்றம்சாட்டி இருக்கிறார்.

Kannan

முதல்வருக்கு சில புள்ளி விபரங்கள் :

வெளிநாட்டு முதலீடு, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'பேட்ச் வொர்க்' மாடல் முதல்வர் ஸ்டாலினுக்கு, சில புள்ளி விபரங்களை நினைவூட்ட விரும்புவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

பிற மாநிலங்களில் வளர்ச்சி அதிகரிப்பு :

2020-21 ஆண்டின் தொழில்துறை கணக்கெடுப்பின்படி, முதல் ஐந்து மாநிலங்களின் பங்கானது, தமிழகம் 15; குஜராத் 12.7; மஹா ராஷ்டிரா 12.3; உத்தரப்பிரதேசம் 6.8; கர்நாடகா 6.2 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

இதில், உத்தர பிரதேசத்தில் வேலைவாய்ப்பின் வளர்ச்சி 1.2, மஹாராஷ்டிராவில் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் கடந்த 2020-21 போல், 2023 - 24ம் ஆண்டிலும், வேலைவாய்ப்பின் பங்கு அப்படியே இருக்கிறது.

துபாய் முதலீடு எங்கே போனது? :

பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட 6,000 கோடி ரூபாய், துபாய் முதலீடு என்ன ஆனது; தொழில் துறை பதிவுகளில் அது எங்கு உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், ஐ.இ.எம்., அதாவது, தொழில் துறை தொழில் முனைவோர் மெமொரண்டம் வாயிலாக, தமிழகத்திற்கு 37,307 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது.

தமிழகம் பின்தங்கி உள்ளது :

அதே நேரத்தில், குஜராத்திற்கு 2,89,110 கோடி. மகாராஷ்டிராவுக்கு 1,65,655 கோடி. உத்தர பிரதேசத்திற்கு 56,900 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. பிற மாநிலங்கள் எல்லாம் முதலீடு மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேறிக் கொண்டிருக்க, தமிழகம் பின் தங்கி உள்ளது.

பெருமை பேசிய காலம் தள்ளுவதா? :

ஆனால், கடந்த கால பெருமைகளை பேசுவதில் மட்டுமே, திமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது. மாநிலத்தின் எதிர்காலம் குறித்த, தொலை நோக்கு பார்வையை திமுக அரசு இழந்து விட்டது” இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

=============