Annamalai Launches Sharp Attack on Congress Leader Manickam Tagore Google
தமிழ்நாடு

ராகுல் காந்தியின் ‘டிராவல் ஏஜென்ட்’ மாணிக்கம் தாகூர்... அண்ணாமலை கடும் விமர்சனம்!

தமிழகத்திற்கு ராகுல் காந்தி வரும்போது அவருக்கு டீ, காபி வாங்கி கொடுக்கும் பணியைத்தான் மாணிக்கம் தாகூர் செய்து வருகிறார் என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்...

NARENDRAN K

மாணிக்கம் தாகூர் மீது அண்ணாமலை சரமாரி விமர்சனம் :

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரை கடுமையாக விமர்சித்து பேசினார்.

தமிழகத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வரும்போது, அவருக்கு டீ, காபி வாங்கிக் கொடுப்பதற்கான ‘டிராவல் ஏஜென்ட்’ ஆகத்தான் மாணிக்கம் தாகூர் செயல்படுகிறார் என்று அவர் விமர்சித்தார்.

மேலும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுவிழந்து இருப்பதாகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வலுவான கூட்டணி கட்சியை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

திமுக கூட்டணியை நம்பியே காங்கிரஸ் இருப்பதாக குற்றச்சாட்டு :

திமுக கூட்டணியில் இணைந்துதான் மாணிக்கம் தாகூர் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அண்ணாமலை, கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பியே காங்கிரஸ் தமிழகத்தில் அரசியல் செய்து வருவதாகக் கூறினார்.

மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் மாறியதாகவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக கூட்டணி கட்சிகளிடம் இருந்து ஆதரவை பெற்றதாகவும் விமர்சித்தார்.

இத்தகைய அரசியல் சூழலில் மற்றவர்களுக்கு அரசியல் பாடம் எடுப்பது வெட்கக்கேடானது என்றும் அவர் தெரிவித்தார்.

விஜயை சந்திக்க வரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே முன்னுரிமையா?

தமிழக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்திப்பதற்காக வரும் வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, கோட் சூட் அணிந்து வரும் வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் விமர்சித்தார்.

சினிமா பிரபலங்களை தலைவர்களாக கொண்டாடும் கலாசாரத்துக்கு எதிர்ப்பு :

தமிழகத்தில் திரைப்படப் பிரபலங்களை அரசியல் தலைவர்களாக கொண்டாடும் போக்கு சரியானதல்ல என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

இரண்டு திரைப்படங்களில் நடித்தாலே அடுத்த தலைவர் என்றும், பத்து படங்களில் நடித்துவிட்டால் அடுத்த எம்.ஜி.ஆர் என்றும் பேசப்படும் கலாசாரம் தமிழகத்தில் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்தக் கலாசாரத்தை உருவாக்கியது யார் என்பதை திமுக தலைமை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் தாங்கள்தான் காரணம் என்று திமுக தலைவர்கள் நினைக்கும் மாயப் பிரமையிலிருந்து வெளிவர வேண்டும் என்றும் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை விமர்சித்தார்.

======================